Road Safety Awareness Rally
செ.வெ.எண்: 59/2026
நாள்: 21.01.2026
திண்டுக்கல் மாவட்டம்
திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் 37-வது தேசிய சாலை பாதுகாப்பு விழாவை முன்னிட்டு, பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் திண்டுக்கல் மாவட்ட வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் நடைபெற்ற ”ஹெல்மெட் விழிப்புணர்வு இருசக்கர வாகன பேரணி”-யை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
திண்டுக்கல் மாவட்டம், வருவாய் கோட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று (21.01.2026) 37-வது தேசிய சாலை பாதுகாப்பு விழாவை முன்னிட்டு, பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் திண்டுக்கல் மாவட்ட வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் நடைபெற்ற ”ஹெல்மெட் விழிப்புணர்வு இருசக்கர வாகன பேரணி”-யை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
தொடர்ந்து, மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்ததாவது:-
தமிழகத்தில் ஆண்டுதோறும் ஜனவரி மாதம் முழுவதும் சாலை பாதுகாப்பு மாதமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, இந்தாண்டு தமிழ்நாடு முழுவதும் 37-வது தேசிய சாலை பாதுகாப்பு மாத விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக திண்டுக்கல் மாவட்டத்தில் இன்றைய தினம் ஹெல்மெட் விழிப்புணர்வு இருசக்கர வாகன பேரணி சிறப்பாக நடைபெற்று வருகிறது.
மேலும், தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் சாலை விபத்துக்களுக்கு உள்ளாகி உயிர் இழந்தோரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இந்த சாலை விபத்துக்களுக்கு சாலைகளில் இருசக்கர வாகனம், நான்கு சக்கர வாகனத்தில் பயணம் செய்யும் பயணிகளின் அஜாக்கிரதையும் ஒரு காரணமாகும். ஏனெனில், சாலைகளில் பயணம் செய்யும் போது மொபைல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டுவது, வாகனத்தை வேகமாக ஓட்டுவது, மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவது உள்ளிட்டவைகளும் காரணமாகும்.
எனவே, சாலைகளில் பயணம் செய்வோர் தமிழ்நாடு அரசின் மூலம் சாலை பாதுகாப்பு குறித்து அறிவுறுத்தப்பட்டுள்ள விதிமுறைகளை பின்பற்றி வாகனத்தை ஓட்ட வேண்டும். மேலும், வாகன விபத்தில் சிக்கி உயிரிழப்பதால் தன்னுடைய பெற்றோர்கள், உடன் பிறந்தோர் எந்த அளவிற்கு வேதனைக்கு உள்ளாவார்கள் என்பதை எண்ணி இளைஞர்கள் வாகனத்தை குறிப்பிட்ட வேகத்தில் ஓட்ட வேண்டும். வாகன விபத்தில் சிக்கி உயிரிழந்தவரின் குடும்பத்தினர் எந்த அளவிற்கு வேதனை அடைந்தனர் என்பதை அனைவரும் ஏதாவதொரு சூழ்நிலையில் பார்த்து இருப்போம். அவர்கள் பட்ட வேதனை நம் குடும்பதாரும் பட கூடாது என்பதை அனைவரும் உணர்தல் வேண்டும்.
மேலும், வாகனத்தில் செல்லும் போது முன்னால் செல்லும் வாகனத்திற்கு பின்னரே பின்னால் செல்லும் வாகன ஓட்டிகள் செல்ல வேண்டும். முன்னால் செல்லும் வாகனத்தை முந்தி செல்வதற்கு எத்தணிக்க கூடாது. முன்னால் செல்லும் வாகன ஓட்டுநர்கள் ஏதாவதொரு இடத்தில் மாற்று சாலையினை பயன்படுத்தக் கூடும். அப்போது, பின்னால் செல்லும் வாகன ஓட்டுநர்களுக்கு சைகை கொடுத்துவிட்டு வாகனத்தை திருப்ப வேண்டும். வாகன ஓட்டுநர்கள் சிக்னல்களில் ரெட் சிக்னல் காண்பிக்கும்போது வாகனத்தை நிறுத்தி, பச்சை சிக்னல் காண்பிக்கும்போது வாகனத்தை செலுத்த வேண்டும்.
இரண்டு சக்கர வாகனத்தில் செல்லும்போது ஹெல்மெட் அணிந்தும், நான்கு சக்கர வாகனத்தில் செல்லும்போது சீட் பெல்ட் அணிந்தும் வாகனத்தை ஓட்டுவது கட்டாயமாகும். வாகனத்தில் பயணம் செய்பவர்கள் ஹெல்மெட், சீட் பெல்ட் ஆகியவற்றை தங்களுடைய உயிர் கவசமாக எண்ண வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன்,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.
தொடர்ந்து, போக்குவரத்து போலீசார். சட்ட ஒழுங்கு போலீசார், இரண்டு சக்கர வாகன விற்பனையாளர்கள், ஓட்டுநர் பயிற்சி பள்ளி உரிமையாளர்கள் கலந்து கொண்ட நடைபெற்ற ”ஹெல்மெட் விழிப்புணர்வு இருசக்கர வாகன பேரணி” மற்றும் ”சீட் பெல்ட் விழிப்புணர்வு நான்கு சக்கர வாகன பேரணி” திண்டுக்கல் மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் தொடங்கி பேருந்து நிலையம், வாணிவிலாஸ் மேடு, தாடிக்கொம்பு ரோடு வழியாக அஞ்சலி பைபாஸ் அங்குவிலாஸ் பள்ளியில் நிறைவடைந்தது.
மேலும், பேருந்தில் படியில் பயணம் செய்வதை தவிர்கவும், சிக்னல்களை கடைபிடிக்கவும், குடிபோதையில் வாகனங்கள் ஓட்டக்கூடாது, தலைக்கவசம் கட்டாயம் அணிந்து வாகனம் ஓட்ட வேண்டும் உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய அட்டையினை வாகனத்தில் வைத்துக்கொண்டு பேரணியாக சென்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இப்பேரணியில், திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் திரு.வி.திருமலை, வட்டாரப் போக்குவரத்து அலுவலர் திரு.கண்ணன், 150-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகன ஓட்டுநர்கள்இ 25-க்கும் மேற்பட்ட நான்கு சக்கர வாகன ஓட்டுநர்கள் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.
