SCIENCE TOUR-students-NIZAR
செ.வெ.எண்:-100/2025
நாள்:-29.07.2025
திண்டுக்கல் மாவட்டம்
ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து நிசார் செயற்கைக்கோள் விண்ணில் ஏவும் நிகழ்ச்சியை நேரில் கண்டுகளிக்க செல்லும் மாணவ, மாணவிகளின் அறிவியல் களப்பயணத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
ஆந்திரா மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து நாசா-இஸ்ரோ செயற்கை துளை ரேடார் (நிசார்), இஸ்ரோவின் ஜி.எஸ்.எல்.வி.-எப்16 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்படவுள்ளதை நேரில் பார்வையிடுவதற்காக திண்டுக்கல் மாவட்டத்திலிருந்து அறிவியல் களப்பயணம் செல்லும் மாணவ, மாணவிகளின் அறிவியல் களப்பயணத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் இன்று(29.07.2025) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து கொடியசைத்து தொடங்கி வைத்து, இஸ்ரோ சின்னம் பொருத்திய தொப்பி மற்றும் அடையாள அட்டைகளை மாணவ, மாணவிகளுக்கு வழங்கினார்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:-
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம்(இஸ்ரோ) மற்றும் அமெரிக்காவின் நாசாவின் முதல் கூட்டு செயற்கைக்கோளான நாசா-இஸ்ரோ செயற்கை துளை ரேடார் (நிசார்), இஸ்ரோவின் ஜி.எஸ்.எல்.வி.-எப்16 ராக்கெட் மூலம் ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து 30.07.2025 அன்று மாலை 5.30 மணிக்கு விண்ணில் ஏவப்படவுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில், திண்டுக்கல் கல்வி அறக்கட்டளை மூலமாக அரசு பள்ளிகளில் பயிலும் 11-ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகள் 50 பேர் 30.07.2025 அன்று மாலை 05.30 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் ஏவப்பட உள்ள நிசார் செயற்கைக்கோள் ஏவும் நிகழ்ச்சியை நேரில் கண்டுகளிப்பதற்காக அறிவியல் களப்பயணம் மேற்கொண்டுள்ளனர். இந்த அறிவியல் களப்பயணம் இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
மாணவ, மாணவிகள் இன்று(29.07.2025) இரவு புறப்பட்டு 30.07.2025 அன்று அதிகாலை சென்னை சென்றடைகின்றனர். சென்னை பிர்லா கோளரங்கத்தை பார்வையிடுகின்றனர். பின்னர், ஸ்ரீஹரிகோட்டா சென்று சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து விண்ணில் ஏவப்பட உள்ள நிசார் செயற்கைக்கோள் ஏவும் நிகழ்ச்சியை நேரில் கண்டுகளிக்கவுள்ளனர்.
அறிவியல் களப்பயணம் மேற்கொள்ளும் மாணவ, மாணவிகளுக்கு தங்குமிடம், உணவு, குடிநீர் உட்பட அனைத்து வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன, என மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், உதவி ஆட்சியர்(பயிற்சி) மரு.ச.வினோதினி பார்த்திபன், இ.ஆ.ப., மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) திரு.மு.கோட்டைக்குமார், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திருமதி ப.உஷா, ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் மற்றும் துறை அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.

.

.