Close

Tamilvalarchi – Notification

Publish Date : 25/11/2024

செ.வெ.எண்:-55/2024

நாள்:-22.11.2024

திண்டுக்கல் மாவட்டம்

ஜவகர்லால் நேரு அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, மாவட்ட அளவில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி 03.12.2024 அன்று நடைபெறவுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் 2021-22-ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையில் நாட்டிற்காக பாடுபட்ட தலைவர்களான மகாத்மா காந்தி, ஜவகர்லால் நேரு, அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் கலைஞர் ஆகியோரின் பிறந்த நாளன்று மாவட்ட அளவில் கல்லுாரி மற்றும் பள்ளி மாணவர்களுக்கு பேச்சுப் போட்டிகள் நடத்தி பரிசு, பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட வேண்டும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது.

அதன்படி, ஜவகர்லால் நேரு அவர்களின் பிறந்த நாளை(நவம்பர் 14ஆம் நாள்) முன்னிட்டு அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளுக்குத் தனித்தனியே பேச்சுப்போட்டி நடத்தப்பட்டு பரிசுத்தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும் என்று தமிழ் வளர்ச்சித்துறை அறிவித்துள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் ஜவகர்லால் நேரு அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு 03.12.2024 (செவ்வாய்க் கிழமை) அன்று திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள பள்ளிகளில் (6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை) பயிலும் மாணவ, மாணவிகள் மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு பேச்சுப்போட்டி தனித்தனியே நடைபெறவுள்ளன.

மாவட்ட அளவில் நடத்தப்பெறும் இப்போட்டியில் பங்குபெற்று வெற்றிபெறும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்குத் தனித்தனியே முதல் பரிசாக ரூ.5,000, இரண்டாம் பரிசாக ரூ.3,000, மூன்றாம் பரிசாக ரூ.2,000 என்ற வகைப்பாட்டில் பரிசுகள் வழங்கப்படவுள்ளன. அத்துடன் பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டியில் பங்கேற்கும் மாணவர்களுள் அரசு பள்ளி மாணவர்கள் இருவரை மட்டும் தெரிவு செய்து அவர்கள் ஒவ்வொருவருக்கும் சிறப்புப் பரிசுத் தொகையாக ரூ.2,000 வீதமும் வழங்கப்படவுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் (ஒரு பள்ளிக்கு ஒருவர், ஒரு கல்லூரிக்கு இருவர்) இப்பேச்சுப் போட்டியில் பங்கேற்கலாம். இப்போட்டி நடைபெறும் இடம், நேரம், தலைப்பு, விதிமுறைகள் ஆகியவற்றை பள்ளிகளுக்கு முதன்மைக் கல்வி அலுவலர் வாயிலாகவும், கல்லூரிகளுக்கு கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் வாயிலாகவும் தெரிவிக்கப்படும். இப்போட்டியில் பங்கேற்க விரும்பும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பள்ளித் தலைமையாசிரியர், கல்லூரி முதல்வரிடம் பரிந்துரைக்கடிதம் பெற்று போட்டி நாளன்று தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநரிடம் நேரில் அளித்தல் வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகத்தில் நேரிலோ அல்லது தொலைபேசி (0451-2461585) வாயிலாகவோ சம்பந்தப்பட்ட அலுவலர்களை தொடர்புகொண்டு தெரிந்துகொள்ளலாம், என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.