Close

Thaipoosa Festival – Inspection

Publish Date : 31/01/2026
.

செ.வெ.எண்: 92/2026

நாள்: 30.01.2026

திண்டுக்கல் மாவட்டம்

பழனி முருகன் திருக்கோவிலில் நடைபெறவுள்ள தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு மேற்கோள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன்., இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

திண்டுக்கல் மாவட்டம், பழனி முருகன் திருக்கோவிலில் நடைபெறவுள்ள தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு மேற்கோள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடு பணிகள் குறித்து இன்று (30.01.2026) மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன்., இ.ஆ.ப., அவர்கள் ஆய்வு செய்து பார்வையிட்டார்.

தொடர்ந்து, பழனி அடிவார காவல்நிலைய அலுவலகத்தில் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு மேற்கோள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் இன்று (30.01.2026) மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன்., இ.ஆ.ப., அவர்கள் நடைபெற்றது.

முன்னதாக, ஒட்டன்சத்திரம் குழந்தை வேலப்பர் கோவிலில் தைப்பூசத் திருவிழாவில் கலந்து கொள்வதற்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு வழங்கப்படும் அன்னதானம், மருத்துவ வசதி, கழிவறை வசதி உள்ளிட்ட வசதிகள் குறித்து பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், விருப்பாட்சியில் பாதயாத்திரை தங்கும் விடுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் குறித்தும், பழனி அடிவாரத்தில் 600 கேமராக்களை கண்காணிக்க அமைக்கப்பட்டுள் கட்டுப்பாட்டு அறையினை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தொடர்ந்து, மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன்., இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்ததாவது:-

திண்டுக்கல் மாவட்டம், பழனி முருகன் திருக்கோவிலில் வருகின்ற 01.02.2026-அன்று தைப்பூசத் திருவிழா சிறப்பாக நடைபெறவுள்ளது. மேலும், தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு மாவட்ட நிர்வாகம், காவல்துறை, இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும், கிரிவீதியை சுற்றி பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சன்னதி வீதியில் செல்லும் பக்தர்கள் இடையூறு இல்லாமல் செல்வதற்கு தேவையான அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

மேலும், தைப்பூசத் திருவிழா நாளன்று அதிகாலை 04.00 மணிக்கு தரிசனம் செய்வதற்கு கோவில் நடை திறக்கப்படும். கோவில் நடை திறக்கப்பட்ட பின்பு அன்று இரவு முழுவதும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், கடந்த 4 நாட்களில் மட்டும் 2 இலட்சம் பக்தர்கள் கோவிலுக்கு வருகை புரிந்துள்ளனர். இன்றைய தினம் மதியம் வரை 40 ஆயிரம் பக்தர்கள் வருகை புரிந்துள்ளனர். மேலும், பக்தர்கள் தொடர்ந்து வருகைபுரிந்த வண்ணம் உள்ளார்கள். ஆண்டுதோறும் சாமி தரிசனம் செய்யும் பக்தர்கள் குறைந்தது 4 மணி முதல் 5 மணி வரை காத்திருக்க வேண்டியுள்ளது. சாமி தரிசனம் செய்ய அதிக நேரம் காத்திருப்பதால் பக்தர்கள் சோர்வு அடைந்து விடுகின்றனர். இந்த ஆண்டு பக்தர்களின் நலனை கருத்திற்கொண்டு இந்து சமய அறநிலையத் துறையின் சார்பில் சிற்றுண்டிகள், தண்ணீர் பாட்டில்கள் வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தொடர்ந்து, இடும்பன்குளம், சண்முகாநதி உள்ளிட்ட பகுதிகளில் ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் அதிகளவில் பணியாளர்களை நியமித்து பணிகளை மேற்கொள்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், பல்வேறு துறைகளின் சார்பில் பேருந்து வசதி, குடிநீர் வசதி, கழிப்பறை வசதி உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் பொதுமக்கள் சிரமமின்றி வந்து செல்வதற்கு போக்குவரத்து வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

மேலும், காவல்துறையின் மூலம் 3 ஆயிரம் காவலர்கள் காவல் பணியில் ஈடுபடுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தைப்பூசத் திருவிழா நாளில் கூட்டநெரிசல் அதிகமாக காணப்படுவதால் பக்தர்களின் உடைமைகள் திருடுபோவதற்கு வாய்ப்புள்ளது. இதனை கருத்திற்கொண்டு 22 சிறப்பு குற்றக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 600 கேமராக்கள் பொருத்தி கண்காணிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் உத்தரவின்படி, உலக பிரசித்தி பெற்ற தைப்பூசத் திருவிழா சிறப்பாக நடைபெறுவதற்கு அனைத்து வகையான முன்னேற்பாடு பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன என மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.பிரதீப், இ.கா.ப., அவர்கள், பழனி திருக்கோயில் இணை ஆணையர் மற்றும் செயல் அலுவலர் திரு.செ.மாரிமுத்து, பழனி வருவாய் கோட்டாட்சியர் திரு.இரா.கண்ணன், பழனி மாநகராட்சி ஆணையர் திரு.டிட்டோ, பழனி வட்டாட்சியர் திரு.பிரசன்னா அவர்கள் ஆகியோர் உட்பட பலர் உள்ளனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.