The approval orders for the education loan assistance were issued by Dindigul Member of Parliament, Mr. R. Sachchithanandam.
செ.வெ.எண்:-18/2026
நாள்:05.03.2026
திண்டுக்கல் மாவட்டம்
திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற கல்விக் கடன் வழங்கும் முகாமில் 97 மாணவ, மாணவிகளுக்கு ரூ.2.53 கோடி மதிப்பீட்டிலான கல்விக் கடனுதவிக்கான அனுமதி ஆணைகளை திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஆர்.சச்சிதானந்தம் அவர்கள் வழங்கினார்.
திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கி (கனரா வங்கி) சார்பில் திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ பொறியியல் கல்லுாரியில் இன்று(05.03.2026) நடைபெற்ற கல்விக் கடன் வழங்கும் முகாமினை திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஆர்.சச்சிதானந்தம் அவர்கள் 97 மாணவ, மாணவிகளுக்கு ரூ.2.53 கோடி மதிப்பீட்டிலான கல்வி கடனுதவிக்கான அனுமதி ஆணைகளை வழங்கினார்.தொடர்ந்து, திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஆர்.சச்சிதானந்தம் அவர்கள் தெரிவித்ததாவது:-
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாணவர்களும் உயர்கல்வி பயில வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில், கல்வி சார்ந்த பல்வேறு திட்டங்களை செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக மாணவர்கள் உயர்கல்வி கற்பதற்கு பொருளாதாரம் ஒரு தடையாக இருக்கக் கூடாது என்பதற்காகவும், பொருளாதார ஏற்றத்தாழ்வின்றி அனைவரும் கல்வி பயில்வதற்கு வழிவகை செய்யும் வகையில் கல்விக்கடன் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மாவட்டந்தோறும் மாபெரும் கல்விக் கடன் முகாம்களை நடத்திட உத்தரவிட்டதன் பேரில் மாவட்டந்தோறும் கல்விக்கடன் முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.
வங்கிகளில் உள்ள கடன் திட்டங்கள் குறித்து மாணவர்கள் அறிந்து கொள்வதற்காகவும், கடன் வாங்குவதற்கான புரிதல் குறித்த விழிப்புணர்வை மாணவர்களிடம் ஏற்படுத்துவதற்காகவும், கல்விக்கடன் கோரி இணையதளம் வாயிலாக சுலபமாக விண்ணப்பிக்கும் முறைகள் மற்றும் திட்டங்களை நேரில் தெரிந்து கொள்வதற்காகவும், சேமிப்பு மற்றும் கடன் பற்றிய புரிதல் கல்லூரியில் படிக்கும் மாணவர்களிடம் ஏற்படுத்துவதற்காகவும் இதுபோன்ற கல்விக் கடன் முகாம்கள் நடத்தப்படுகிறது. இந்த முகாம்களில், கடன் திட்டங்கள், கடனுதவிக்குத் தேவையான ஆவணங்கள் குறித்து தெளிவான விளக்கம் அளிக்கப்படுகிறது. மேலும், உயர் கல்வியில் பொறியியல், மருத்துவம், வேளாண் மற்றும் தோட்டக்கலை கல்லூரி, கால்நடை மருத்துவக் கல்லூரி, கலை மற்றும் அறிவியல் கல்லுாரி மாணாக்கர்கள் கல்விக் கடனுதவி பெற்று பயன்பெறலாம்.
அதன்படி, திண்டுக்கல் மாவட்டத்தில் 97 நபர்களுக்கு ரூ.2.53 கோடி மதிப்பீட்டிலான கல்விக்கடன்கள் மாணவ, மாணவியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து, இந்த ஆண்டு 2,000 மாணவ, மாணவியர்களுக்கு ரூ.50.00 கோடி மதிப்பீட்லான கல்விக்கடன்கள் வழங்குவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதுவரை 1388 மாணவ, மாணவியர்களுக்கு ரூ.48.01 கோடி மதிப்பீட்டிலான கல்விக்கடன்கள் வழங்கப்பட்டுள்ளன. மாணவ, மாணவியர்கள் கல்விக்கடன் பெறுவதற்கென ஏற்படுத்தப்பட்டுள்ள இணைதளம் www.vidyalakshmi.co.in மூலம் விண்ணப்பித்து கல்விக் கடன் பெற்று பயனடையலாம்.
மேலும், மாணவ, மாணவியர்கள் அனைவரும் தங்களின் கல்லூரி படிப்போடு, பொது அறிவினையும் வளர்த்துக்கொண்டு தங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்வதோடு, நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். கல்வி பயிலும் மாணவ, மாணவியர்கள் அனைவரும் நாம் நல்ல முறையில் கல்வி பயின்று ஏதாவதொரு துறையில் பணிபுரிய வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் கல்வி பயில வேண்டும். மாணவ, மாணவியர்கள் அனைவரும் நல்ல முறையில் பயின்று எதிர்காலத்தில் நல்ல மனிதர்களாக இருப்பதோடு மட்டுமல்லமால் சமுதாய முன்னேற்றத்திற்கும் ஒத்துழைப்பு நல்க வேண்டும். தமிழ்நாடு அரசின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களை மாணவ, மாணவியர்கள் முழுமையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஆர்.சச்சிதானந்தம் அவர்கள் தெரிவித்தார்.
தொடர்ந்து, இன்றைய தினம் நடைபெற்ற கல்விக் கடன் வழங்கும் முகாமில் 97 மாணவ, மாணவியர்களுக்கு ரூ.2.53 கோடி மதிப்பீட்டிலான கல்விக்கடன் வழங்குவதற்கான அனுமதி ஆணைகளை திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஆர்.சச்சிதானந்தம் அவர்கள் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், உதவி ஆட்சியர் (பயிற்சி) மரு.ச.வினோதினி, இ.ஆ.ப., மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) செல்வி.ர.கீர்த்தனா மணி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் திரு.ஆர்.சிவக்குமார் அவர்கள், திண்டுக்கல் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி உதவி பொது மேலாளர்கள் திரு.விஞ்ச்முரி ராகுல், திரு.சந்திரகுமார் ஆகியோர் உட்பட அரசு அலுவலர்கள், உயர்கல்வி மாணவ, மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.