Close

The District Collector offered welfare aid to the differently abled.

Publish Date : 12/03/2026

செ.வெ.எண்: 40/2026

நாள்: 12.03.2026

திண்டுக்கல் மாவட்டம்

மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 151 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.41.28 இலட்சம் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆப., அவர்கள் வழங்கினார்.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மாற்றுத்திறனாளி நல அலுவலகத்தில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் இன்று (12.03.2026) நடைபெற்ற நிகழ்ச்சியில் 151 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.41.28 இலட்சம் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆப., அவர்கள் வழங்கினார்.

மாற்றுத்திறனாளிகளின் நலனைப் பேணிக் காத்திட வேண்டும் என்ற நோக்கில் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் இந்தியாவிலேயே முதல் முறையாக மாற்றுத்திறனாளிகளின் நல்வாழ்விற்காக தனித் துறையை உருவாக்கினார். மேலும், அவர்களை உரிய மரியாதையுடன் அழைக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தோடு “மாற்றுத்திறனாளிகள்” என்ற சொல்லையும் அறிமுகப்படுத்தினார்.

முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் வழியில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான அரசு தமிழக மக்களின் வாழ்வில் புது ஒளியை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு திட்டங்களை அறிவித்து தொடர்ந்து செல்படுத்தி வருகிறார். குறிப்பாக மாற்றுத்திறனாளிகள் நலனில் பெரிதும் அக்கறை கொண்டு, அவர்கள் முன்னேற்றத்திற்கு மாற்றுத்திறனாளிகள் நலத்துறையை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்து, பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.

மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர், தையல் இயந்திரம், சிறப்பு சக்கர நாற்காலி, மூன்று சக்கர சைக்கிள், செவித்திறன் பாதிக்கப்பட்டோருக்கான காதொலி கருவி, திறன்பேசி, மடக்கு சக்கர நாற்காலி, பார்வையற்றோருக்கான பிரெய்லி கைக்கடிகாரம், பார்வையற்றோருக்கான கருப்பு கண்ணாடி, ஊன்றுகோல், ஒளிரும் மடக்கு குச்சி ஆகிய உதவி உபகரணங்களும், மாதாந்திர உதவித்தொகை மற்றும் தொழில் கடனுதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும், தமிழக அரசின் நலத்திட்டங்கள், சென்றடையும் வகையில், மாவட்ட நிர்வாகம் முனைப்புடன் செயல்பட்டு, பல்வேறு நலத்திட்ட உதவி உபகரணங்கள், உதவித்தொகைகள் வழங்கப்பட்டு வருகிறது.

தொடர்ந்து, மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளை மற்ற குழந்தைகளுக்கு இணையாக சமுதாயத்தில் உயர்த்தும் நோக்கில் தமிழ்நாடு அரசு மாற்றுதிறனாளிகள் நலத்துறையின் மீது தனிக் கவனம் செலுத்தி வருகிறது. மேலும், தமிழ்நாட்டில் முதன் முதலில் வீடுதோறும் சென்று மாற்றுத்திறன் கொண்டவர்களின் எண்ணிக்கையினை கணக்கெடுப்பு செய்து அவர்களுக்கு மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை, பஸ்பாஸ் வழங்குவதற்கு ஏதுவாக உலக வங்கியின் ஒத்துழைப்போடு ”தமிழ்நாட்டின் உரிமைகள்” என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அதனடிப்படையில், இன்றைய தினம் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 7 பயனாளிகளுக்கு ரூ.8,00,800 மதிப்பீட்டில் பேட்டரியால் இயங்கும் சிறப்பு சக்கர நாற்காலிகள், 60 பயனாளிகளுக்கு ரூ.8,67,000 மதிப்பீட்டில் திறன் பேசிகள், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தில் பணிபுரியும் 10 வட்டார ஒருங்கிணைப்பாளர்களுக்கு ரூ.5,33,880 மதிப்பீட்டில் மடிக்கணினிகள், 20 பயனாளிகளுக்கு ரூ.1,87,200 மதிப்பீட்டில் ஸ்டேண்டிங் பிரேம், 10 பயனாளிகளுக்கு ரூ.72,570 மதிப்பீட்டில் கார்னர் சீட், 14 பயனாளிகளுக்கு ரூ.14,70,000 மதிப்பீட்டில் இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர், 14 பயனாளிகளுக்கு ரூ.32,704 மதிப்பீட்டில் நடைபயிற்சி உபகரணங்கள், 12 பயனாளிகளுக்கு ரூ.1,14,000 மதிப்பீட்டில் CP சிறப்பு சக்கர நாற்காலிகள், 1 பயனாளிக்கு ரூ.3,285 மதிப்பீட்டில் காதொலி கருவி, 3 பயனாளிகளுக்கு ரூ.47,250 மதிப்பீட்டில் சக்கர நாற்காலிகள் என மொத்தம் 61 பள்ளி மாணவ, மாணவிகள் உட்பட 151 பயனாளிகளுக்கு ரூ.41.28 இலட்சம் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆப., அவர்கள் வழங்கினார்.

தொடர்ந்து, பல்வேறு வகையான நலத்திட்ட உதவிகளை பெற்றுக்கொண்ட மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவர்களது பெற்றோர்களிடம் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆப., அவர்கள் குறைகளை கேட்டறிந்து, உடன் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

இந்நிகழ்ச்சியில், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் திரு.சி.தங்கவேல், இளநிலை மறுவாழ்வு அலுவலர் திரு.இரா.கார்த்திகேய பிரபு, ஒருங்கிணைந்த பள்ளி கல்வி உதவி திட்ட அலுவலர் திரு.தி.திருப்பதி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு.சி.வீரமணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.