Close

The District Collector personally inspected the center where the 10th standard public examination will be held.

Publish Date : 12/03/2026

செ.வெ.எண்:-36/2026

நாள்: 11.03.2026

திண்டுக்கல் மாவட்டம் 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும் மையத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

திண்டுக்கல் மாவட்டம், புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்று வரும் 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மையத்தை இன்று (11.03.2026) மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்பொது, மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்ததாவது:-

தமிழ்நாட்டில் 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இன்றைய தினம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இத்தேர்வு வருகின்ற 02.04.2026 வரை நடைபெறவுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் இத்தேர்விற்காக மாவட்ட அளவில் 8 வினாத்தாள் கட்டுப்பாட்டு மையங்களும் மற்றும் 4 விடைத்தாள் சேகரிப்பு மையங்களும் அமைக்கப்பட்டு உள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் இத்தேர்வினை திண்டுக்கல் கல்வி மாவட்ட அளவில் 65 தேர்வு மையங்களில் 16,124 மாணவ/மாணவியர்கள் மற்றும் பழநி கல்வி மாவட்ட அளவில் 49 தேர்வு மையங்களில் 8,791 மாணவ /மாணவியர்கள் என மொத்தமாக 114 தேர்வு மையங்களில் 24,915 மாணவ /மாணவியர்கள் தேர்வு எழுதுகின்றனர். இதில், மாணவர்களின் எண்ணிக்கை 11,985 மற்றும் மாணவியர்களின் எண்ணிக்கை 12,930 ஆகும். மேலும், 7 தேர்வு மையங்கள் தனித்தேர்வர்களுக்கான மையமாக செயல்படுகிறது. இத்தேர்வு மையங்களில் 727 பேர் தேர்வு எழுதுகின்றனர். இதில், 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்விற்கு 390 மாணவர்களும், 154 மாணவர்களும் மற்றும் தனித்தேர்வர்களில் 17 மாணவர்கள், 8 மாணவிகள் என மொத்தம் 569 மாணவ, மாணவியர்கள் வருகைபுரியவில்லை இத்தேர்வில் 336 (PWD CANDIDATES) தேர்வர்கள் கூடுதல் சலுகை நேரம் கோரியும் மற்றும் 328 (SCRIBE CANDIDATES) தேர்வர்கள் சொல்வதை எழுதுபவர்கள் கோரியும் விண்ணப்பித்து உள்ளனர். சொல்வதை எழுதுபவராக நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு சிறப்பாசிரியர்கள் மூலம் பயிற்சி வழங்கப்பட்டு இத்தேர்வர்களுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து தேர்வு மையங்களிலும் கட்டுப்பாட்டு அறையில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு பாதுகாப்பான முறையில் நேர்வுகள் நடைபெறுகிறது. அரசுத் தேர்வுகள் இயக்குநர் அவர்களின் தேர்வு வழிகாட்டி நெறிமுறைகள் சார்ந்து தேர்வுப்பணியில் ஈடுபடும் அனைத்து உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்களுக்கு இணை இயக்குநர் (மேநிக) தலைமையில் கூட்டம் நடத்தப்பட்டு தேர்வு நடைமுறைகள் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது.7894

இத்தேர்வினை நன்முறையில் நடத்த மாவட்ட நிர்வாகத்தின் பிற துறைகளும் இணைந்து தேர்வர்களுக்கு தேவையான போக்குவரத்து வசதி, அவசரகால மருத்துவ உதவி தடையில்லா மின்சார வசதி, தீத்தடுப்பு வசதி, சுகாதரம் மற்றும் குடிநீர் வசதி போன்ற அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. தேர்வர்கள் பாதுகாப்பான முறையில் தேர்வு எழுத ஒவ்வொரு தேர்வு மையத்திற்கும் போலீஸ் பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. மந்தன கட்டுக்கள் காவல்துறை பாதுகாப்புடன் தேர்வு மையங்களுக்கு 27 வழித்தடங்களில் வழித்தட அலுவலர்கள் மூலம் கொண்டு செல்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், மாவட்ட வருவாய் அலுவலர் அவர்களின் தலைமையில் கண்காணிப்பு குழு ஏற்படுத்தப்பட்டு ஒவ்வொரு தேர்வு மையமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. பள்ளிக் கல்வித்துறை கண்காணிப்பு அலுவலராக உள்ள இணை இயக்குநர் (மேல்நிலை) மற்றும் முதன்மைக் கல்வி அலுவலர் அவர்கள் ஆகியோர் தலைமையில் மாவட்ட கல்வி அலுவலர்கள், அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் இணைந்து அனைத்து தேர்வு மையங்களிலும் தேர்வுப்பணிகள் நன்முறையில் செயல்பட்டு வருகிறதா என்பதை கண்காணித்து வருகின்றனர். மேலும், நிலையான படை உறுப்பினராக 275 ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர் இத்தேர்விற்காக உயர் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் உடற்கல்வி ஆசிரியர்கள், தனியார் பள்ளி ஆசிரியர்கள் என மொத்தமாக 2,100 பேர் இத்தேர்வுப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
எனவே, 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வினை அனைத்து தேர்வு மையங்களிலும் உள்ள தேர்வர்கள் அனைவரும் தேர்வினை சிறப்பாக எழுத மாவட்ட நிர்வாகம் மற்றும் பள்ளிக் கல்வித்துறை இணைந்து அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார். இந்த ஆய்வின்போது, மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் திருமதி.ப.உஷா அவர்கள் உட்பட அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.