The Hon’ble Food and Civil Supply Minister – NKS CAMP – Chatrapatty
செ.வெ.எண்:-37/2025
நாள்: 13.12.2025
திண்டுக்கல் மாவட்டம்
மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சத்திரப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாமினை தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சத்திரப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாமினை இன்று (13.12.2025) தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
இந்நிகழ்ச்சிகளில், மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் தெரிவித்ததாவது:-
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆட்சிப்பொறுப்பேற்ற பின்பு, பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களின் நலனை கருத்திற்கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். தமிழ்நாடு அரசின் மூலம் செயல்படுத்தப்படும் அனைத்து திட்டங்களும் அனைவருக்கும் சென்றடைய வேண்டும் என்பதனை நோக்கமாகக் கொண்டு ”எல்லோருக்கும் எல்லாம்” என்ற உன்னத நோக்கில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
மாண்புமிகு முதலமைச்சர் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்த போது, வரும் முன் காப்போம் திட்டம் கொண்டுவரப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் நோய் வருவதற்கு முன்பாக அவர்களுக்கு மேற்கொள்ள வேண்டிய இரத்த பரிசோதனை, இசிஜி, சக்கரை பரிசோதனை ஆகிய பரிசோதனைகள் இம்முகாமில் மேற்கொள்ளப்பட்டது. முன்னாள் முதலமைச்சர் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் கருணாநிதி அவர்களின் வழியில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தை 02.08.2025-அன்று சென்னையிலிருந்து தொடங்கி வைத்தார்கள். இத்திட்டத்தின்படி, அனைத்து வகையான மருத்துவக் கருவிகளும், சிறப்பு மருத்துவ நிபுணர்களும் கலந்துகொண்டு, பொதுமக்களை பரிசோதனை செய்து, யாருக்காவது நோய் கண்டறியப்பட்டால் அதற்கான சிகிச்சைகள் அளிக்கப்படவுள்ளன. மருத்துவமனையில் உள்ள அனைத்து மருத்துவ பரிசோதனைகளையும் இந்த முகாமிலேயே மேற்கொள்ளும் வகையில் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தை பொதுமக்கள் நல்ல முறையில் பயன்படுத்தி, தங்கள் ஆரோக்கியத்தை பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.
திண்டுக்கல் மாவட்டத்தில் 15 வட்டாரங்களில், ஒவ்வொரு வட்டாரத்திற்கும் 3 முகாம்கள் வீதம் 45 முகாம்கள் நடத்திட திட்டமிடப்பட்டு, ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமைகளில் முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த முகாமில் 17 சிறப்பு மருத்துத் துறைகள் உட்பட 45க்கும் மேற்பட்ட மருத்துவ சேவைகள் வழங்கப்படுகிறது. அதனடிப்படையில், இன்றைய தினம் திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சத்திரப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாம் சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. இம்முகாமில் தமிழ்நாட்டிலேயே எந்த முகாம்களிலும் இல்லாத அளவில் 12.30 மணி வரை 1200-க்கும் மேற்பட்டவர்களும் உடலினை பரிசோதனை செய்வதற்கு பதிவு செய்துள்ளார்கள். இம்முகாம் தொடர்ந்து மாலை 04.00 மணி வரை நடைபெற உள்ளது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆட்சிப்பொறுப்பேற்ற பின்பு ”பள்ளிக்கல்வித் துறை” மற்றும் ”மருத்துவத்துறை” ஆகிய இரண்டு துறைகளுக்கு அதிகளவில் நிதியொதுக்கீடு செய்து வருகிறார்கள். பல்வேறு துறைகள் இருந்தாலும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு ”பள்ளிக்கல்வித் துறை” மற்றும் ”மருத்துவத்துறை” இரண்டு துறைகளும் இரண்டு கண்கள் ஆகும். மேலும், இந்தியாவிலேயே முதன் முறையாக அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கின்ற குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை செயல்படுத்தினார்கள். இத்திட்டத்தினை அடிப்படையாகக் கொண்டு பல்வேறு நாடுகளில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆட்சிப்பொறுப்பேற்ற அன்றைய தினமே நகரப் பேருந்துகளில் பெண்கள் கட்டணமில்லா பயணம் மேற்கொள்ளும் விடியல் பயணத் திட்டத்தை செயல்படுத்தினார்கள். அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு காலை உணவுத் திட்டம், அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் (தமிழ் வழிக்கல்வி) படித்து உயர்கல்வி பயிலும் மாணவ, மாணவிகளுக்கு ‘புதுமைப்பெண்’ திட்டம் மற்றும் ”தமிழ்ப்புதல்வன்” திட்டம், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம், வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்ப அட்டைதாரர்களின் இல்லத்திற்கே சென்று அரிசி, சர்க்கரை உள்ளிட்ட ரேசன் பொருட்களை விநியோகம் செய்யும் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம், ஒரு குடும்பத்தில் பெற்றோரை இழந்த எத்தனை குழந்தைகள் இருந்தாலும் அவர்களுக்கு 18 வயது வரையிலான பள்ளிப் படிப்பு முடியும் வரை இடைநிற்றல் இன்றி கல்வியை தொடர மாதம் ரூ.2,000 உதவித்தொகை வழங்கிடும் “அன்புக்கரங்கள்” திட்டம், விபத்திற்கு உள்ளான நபர்களை அரசு அங்கீகரிக்கப்பட்ட தனியார் மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவமனைகளில் சேர்த்து சிகிச்சை பெற்றால் முதல் 48 மணி நேரத்திற்கு மருத்துவ செலவுத் தொகையாக ரூ.2.00 இலட்சம் வழங்கப்படும் ”நம்மைக் காக்கும் 48” திட்டம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு திட்டங்களை செயல்படுத்தியுள்ளார்கள்.
மேலும், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தினை செயல்படுத்தியுள்ளார்கள். ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதிகளைச் சேர்ந்த 51 ஆயிரம் பயனாளிகள் முதற்கட்டமாக வழங்கப்பட்ட கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் பயனடைந்துள்ள வருகிறார்கள். இந்நிலையில், நேற்று (13.12.2025) மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள் முன்னிலையில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின்
2-ஆவது கட்ட விரிவாக்கத்தை தொடங்கி வைத்தார்கள். அதனைத் தொடர்ந்து, ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதிகளைச் சேர்ந்த 10 ஆயிரம் பயனாளிகளுக்கு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட்டது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தமிழ்நாட்டை குடிசைகள் இல்லாத மாநிலமாக உருவாக்க கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தை செயல்படுத்தி வருகிறார். தமிழ்நாட்டில் 8 இலட்சம் வீடுகள் கட்ட திட்டமிடப்பட்டு, 2 இலட்சம் வீடுகள் கட்டுவதற்கு ஆணை வழங்கப்பட்டதைத் தொடர்ந்து 1 இலட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால், தென்காசியில் 29.10.2025-அன்று பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்கப்பட்டது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், காவிரி ஆற்றிலிருந்து குடிநீர் கிடைப்பதற்கு ரூ.1000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதைத் தொடர்ந்து பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு நிறைவேற்றபட்டுள்ளது. விரைவில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்படவுள்ளது. மேலும், அம்பிளிக்கையில் பெண்கள் மட்டும் படிக்கும் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் சார்பில், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி தொடங்கப்பட்டுள்ளது. இந்தக்கல்லுாரி மாணவிகளுக்கு காலை உணவு மற்றும் மதிய உணவு பழனி திருக்கோயில் சார்பில் வழங்கப்படுகிறது. இந்தக் கல்லுாரிக்கு ஒட்டன்சத்திரத்தில் ரூ.25.00 கோடி மதிப்பீட்டில் கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. படித்து முடித்த மாணவ, மாணவிகள் போட்டித் தேர்வில் வெற்றி பெற காளாஞ்சிப்பட்டியில் கலைஞர் நுாற்றாண்டு ஒருங்கிணைந்த போட்டித் தேர்வு பயிற்சி மையம் குளிர்சாதன வசதியுடன் ரூ.12.00 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ளது. இப்பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்ற மாணவ, மாணவியர்கள் பல்வேறு போட்டி தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார்கள்.
அதேபோல், காளாஞ்சிபட்டியில் 35 ஏக்கர் நிலப்பரப்பில் ரூ.8.00 கோடி மதிப்பீட்டில் விளையாட்டு மைதானம் அமைக்கும் பணிகளும், தொப்பம்பட்டியில் ரூ.13 கோடி மதிப்பீட்டில் விளையாட்டு மைதானம் அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. இப்பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்கப்படும். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆட்சிப்பொறுப்பேறற்ற பின்னர் ஒட்டன்சத்திரத்தில் ரூ.25.00 கோடி மதிப்பீட்டில் அவசர சிகிச்சை பிரிவு மருத்துவமனை கட்டடம் கட்டப்பட்டுள்ளது. விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படவுள்ளது. மேலும், கள்ளிமந்தையம் ஊராட்சியில் 30 படுக்கை வசதிகள் கொண்ட ஆரம்ப சுகாதார நிலையம் கட்டப்பட்டுள்ளது. அதேபோல, கீரனூர் ஊராட்சியில் 30 படுக்கை வசதிகள் கொண்ட ஆரம்ப சுகாதார நிலையம் கட்டப்பட்டுள்ளது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆட்சிப்பொறுப்பேற்ற பின்பு 21 இலட்சம் பயனாளிகளுக்கு குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், ஒட்டன்சத்திரம் ஊராட்சிக்குட்பட்ட அனைத்து ஊராட்சிப் பகுதிகளுக்கும் தார் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. ”மரம் வளர்த்தால் மரம் நம்மை வளர்க்கும்” என்பதை நோக்கமாகக் கொண்டு சாலைகள் தோறும் மரம் நடும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தமிழ்நாடு அரசின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களை பொதுமக்கள் அனைவரும் முழுமையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் தெரிவித்தார்.
தொடர்ந்து, சத்திரப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இன்றைய தினம் நடைபெற்ற நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாமில் கற்பிணி தாய்மார்களுக்கு சத்துணவு பெட்டகத்தையும், மகப்பேறு சஞ்சிவி பெட்டகத்தையும் மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அவர்கள் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், பழனி மாவட்ட சுகாதார இணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள்) மரு.உதயக்குமார், பழனி வருவாய் கோட்டாட்சியர் திரு.இரா.கண்ணன், ஒட்டன்சத்திரம் வட்டாட்சியர் திரு.சஞ்சைகாந்தி அவர்கள் ஆகியோர் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.