Close

The Hon’ble Food and Civil Supply Minister – ODC- Ration Shop

Publish Date : 31/01/2026
.

செ.வெ.எண்:-90/2026

நாள்:-30.01.2026

திண்டுக்கல் மாவட்டம்

மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வீரப்பகவுண்டன்வலசு, பாலப்பன்பட்டி ஆகிய ஊராட்சிகளில் புதிய முழுநேர நியாய விலைக்கடைகளையும், குமாரசாமி கவுண்டன் வலசில் புதிய பகுதிநேர நியாய விலைக்கடைகளையும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வீரப்பகவுண்டன்வலசு, பாலப்பன்பட்டி ஆகிய ஊராட்சிகளில் புதிய முழுநேர நியாய விலைக்கடைகளையும், குமாரசாமி கவுண்டன் வலசில் புதிய பகுதிநேர நியாய விலைக்கடைகளையும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு இன்று(30.01.2026) திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் தெரிவித்ததாவது:-

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து எல்லோருக்கும் எல்லாம் என்ற வகையில் சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள். அரசின் திட்டங்கள் அனைத்தும் ஜாதி, மதம், இனம், கட்சி பாகுபாடு இன்றி அனைத்துத் தரப்பு மக்களுக்கும் கிடைக்கும் வகையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வீரப்பன்கவுண்டன் வலசு ஊராட்சியில் ரூ.9.32 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய முழுநேர நியாயவிலைக்கடை, பாலப்பன்பட்டி ஊராட்சியில் ரூ.9.97 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய முழுநேர நியாயவிலைக்கடை மற்றும் குமாரசாமி கவுண்டன் வலசு ஊராட்சியில் ரூ.12.67 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய பகுதி நேர நியாயவிலைக்கடைகளையும் பொது மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த 57 மாதங்களில் 3,256 நியாயவிலைக் கடைகள் பிரிக்கப்பட்டு புதியதாக முழுநேரம் மற்றும் பகுதிநேர நியாயவிலைக் கடைகள் உருவாக்கப்பட்டுள்ளன. திண்டுக்கல் மாவட்டத்தில் 341 புதியதாக முழுநேரம் மற்றும் பகுதிநேர நியாயவிலைக் கடைகள் உருவாக்கப்பட்டுள்ளன.

அதிலும், ஒட்டன்சத்திரம் பகுதியில் 117 நியாயவிலைக்கடைகள் பிரிக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் குடும்ப அட்டை கோரி பெறப்படும் விண்ணப்பங்களில் தகுதியான நபர்களுக்கு 15 நாட்களில் குடும்ப அட்டை வழங்கப்படுகிறது. அந்த வகையில் தமிழ்நாட்டில் இதுவரை 21.00 இலட்சம் புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. திண்டுக்கல் மாவட்டத்தில் இதுவரை 72078 குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், தமிழ்நாட்டிலுள்ள வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்ப அட்டைதாரர்களின் இல்லத்திற்கே சென்று அரிசி, சர்க்கரை உள்ளிட்ட ரேசன் பொருட்களை விநியோகம் செய்யும் “முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தை” தொடங்கி வைத்துள்ளார்கள்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் நெல் மழையின் காரணமாக நனையக்கூடாது என்பதற்காக தமிழ்நாட்டில் ரூ.1000 கோடி மதிப்பீட்டில் நெல் சேமிப்பு கிட்டங்கிகள் கட்டப்பட்டு நெல் சேமிக்கப்பட்டு வருகிறது.

பெண்களின் நலனுக்காக நகரப் பேருந்துகளில் கட்டணமில்லா பயணம் மேற்கொள்ளும் ”விடியல் பயணத் திட்டம்” செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் வாயிலாக வேலைக்குச் செல்லும் ஒவ்வொரு பெண்ணிற்கும் மாதம் ரூ.1000 வரை சேமிப்பு ஏற்படுகிறது. ஒட்டன்சத்திரம் – தொப்பம்பட்டி புதிய வழித்தடம் மற்றும் ஒட்டன்சத்திரம் – மஞ்சநாயக்கன்பட்டி, ஒட்டன்சத்திரம் – தங்கச்சியம்மாபட்டி வழித்தடம் நீட்டிப்பு ஆகிய பேருந்து இயக்கம் நேற்றைய தினம் (29.01.2026) தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ரூ.1000 கோடி நிதி ஒதுக்கீடு செய்து காவிரி ஆற்றிலிருந்து குடிநீர் கிடைப்பதற்கு பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது. ஒரு நபருக்கு 55 லிட்டர் குடிநீர் வழங்கப்படவுள்ளது. அரவக்குறிச்சி பகுதியில் 11 ஏக்கர் நிலத்தில் தண்ணீர் நிரப்புவதற்கு பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.இதன் மூலம் வருகின்ற 30 ஆண்டு காலத்திற்கு தண்ணீர் பிரச்சனை இருக்காது.

வடகாடு, வெரியப்பூர், காவேரியம்மாபட்டி, அம்பிளிக்கை, கப்பல்பட்டி, வாகரை, கீரனூர்,கொழுமங்ககொண்டான், முத்துநாயக்கன்பட்டி ஆகிய 12 ஊராட்சிகளுக்கு புதிய தொடங்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு வேளாண்மை கூட்டுறவு சங்கங்களும் ரூ.61 இலட்சம் மதிப்பீட்டிலான புதிய கடைகள் கட்டுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தில் சுமார் 20.00 இலட்சம் குழந்தைகள் பயனடைந்து வருகின்றனர். இந்த திட்டம் இந்தியாவிலேயே வேறு எந்த மாநிலத்திலும் இல்லை. தமிழ்நாட்டில்தான் செயல்படுத்தப்படுகிறது.

ஒட்டன்சத்திரம் கள்ளிமந்தையத்தில் உயர்கல்வித்துறை சார்பில் ஒரு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி தொடங்கப்பட்டுள்ளது. இந்தக் கல்லுாரிக்கு ரூ.15.00 கோடி மதிப்பீட்டில் சொந்தக்கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. அம்பிளிக்கையில் பெண்கள் மட்டும் படிக்கும் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் சார்பில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி தொடங்கப்பட்டுள்ளது. விருப்பாட்சியில் அரசு தொழிற்பயிற்சி நிலையம் தொடங்கப்பட்டு 4 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்பயிற்சி நிலையத்திற்கு ரூ.6.00 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. பணிகள் முடியும் தருவாயில் உள்ளன.

படித்து முடித்த மாணவ, மாணவிகள் போட்டித் தேர்வில் வெற்றி பெற காளாஞ்சிப்பட்டியில் கலைஞர் நுாற்றாண்டு ஒருங்கிணைந்த போட்டித் தேர்வு பயிற்சி மையம் குளிர்சாதன வசதியுடன் ரூ.12.00 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ளது. இம்மையத்தில் பயிற்சி பெற்ற மாணவிகள் பல்வேறு போட்டி தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார்கள். எனவே, இப்பயிற்சி மையத்தினை மாணவ, மாணவிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். சென்னை அடையாறில் உள்ள அண்ணா இன்ஸ்டிடியூட்டுக்கு அடுத்தபடியாக காளாஞ்சிப்பட்டி மையம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு முழுவதும் 20 இலட்சம் மாணவ, மாணவியர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டத்தினை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவித்துள்ளார்கள். திண்டுக்கல் மாவட்டத்தில் அரசு, அரசு உதவி பெறும் கல்லூரி மற்றும் தனியார் கல்லூரியில் படிக்கக்கூடிய இறுதி ஆண்டு படிக்கும் மாணவ, மாணவியர்களுக்கு முதல் கட்டமாக தற்போது வரை 11 ஆயிரம் மடிக்கணினிகள் வழங்குவதற்கு வந்துள்ளது. தற்போது வரை 5 ஆயிரம் மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளது. 2 இலட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தமிழ்நாட்டை குடிசைகள் இல்லாத மாநிலமாக உருவாக்க கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தை செயல்படுத்தி வருகிறார். தமிழ்நாட்டில் 8 இலட்சம் வீடுகள் கட்ட திட்டமிடப்பட்டு, 2 இலட்சம் வீடுகள் கட்டுவதற்கு ஆணை வழங்கப்பட்டதைத் தொடர்ந்து 1 இலட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால், தென்காசியில் 29.10.2025-அன்று பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ், திண்டுக்கல் மாவட்டத்தில் சுமார் 10,000 வீடுகள் கட்ட அனுமதி வழங்கப்பட்டு கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. ஒரு கலைஞர் கனவு இல்லத்திற்கு ரூ.3.50 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வருகிறது. அதேபோல், ஊரக வீடுகள் பழுதுபார்க்கும் திட்டத்தில் 2.50 இலட்சம் வீடுகளை சீரமைக்க ரூ.2000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முதலமைச்சரின் வீடுகள் மறு கட்டுமான திட்டத்திலும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உங்கள் கனவை சொல்லுங்கள் என்ற திட்டத்தை அறிவித்துள்ளார்கள். எனவே, பொதுமக்கள் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து வழங்க வேண்டும்.அப்பியம்பட்டி ஊராட்சியில் ரூ.6.35 கோடி மதிப்பீட்டில் பணிகள் நடைபெற்றுள்ளது. பொதுமக்கள், விவசாயிகள், மாணவ, மாணவிகள் என அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் அவர்களின் எண்ணங்கள், எதிர்பார்ப்பு மற்றும் நம்பிக்கையை பூர்த்தி செய்யும் விதமாக எல்லோருக்கும் எல்லாம் என்ற வகையில் எண்ணற்ற திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி பொற்கால ஆட்சி நடத்தி வரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் கரங்களை வலுப்படுத்தும் விதமாக என்றென்றும் உறுதுணையுடன் இருக்க வேண்டும், என மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அவர்கள் பேசினார்.

இந்நிகழ்ச்சியில், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ஸ்ரீராகவ் பாலாஜி, பொது விநியோக துணை பதிவாளர் திரு.கார்த்திக்கேயன், தமிழ்நாடு நுகர்பொருள் மண்டல மேலாளர் திரு.சிற்றரசு, மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் திரு.அன்பழகன், ஒட்டன்சத்திரம் வட்டாட்சியர் திரு.சஞ்சைகாந்தி, தொப்பம்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர் திருமதி தாஹிரா உட்பட பலர் உள்ளனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.