The Hon’ble Food and Civil Supply Minister – Oddanchatram Govt Hospital Inspection
செ.வெ.எண்:-88/2026
நாள்:-30.01.2026
திண்டுக்கல் மாவட்டம்
மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனையில் ரூ.20.00 கோடி மதிப்பீட்டில் கூடுதலாக அமைக்கப்பட்டுள்ள தரைத்தளத்துடன் கூடிய 4 தளங்கள் மற்றும் 50 படுக்கை வசதிகளுடன் கூடிய புதிய தீவீர சிகிச்சை பிரிவு கட்டிடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனையில் ரூ.20.00 கோடி மதிப்பீட்டில் கூடுதலாக அமைக்கப்பட்டுள்ள தரைத்தளத்துடன் கூடிய 4 தளங்கள் மற்றும் 50 படுக்கை வசதிகளுடன் கூடிய புதிய தீவீர சிகிச்சை பிரிவு கட்டிடத்தை இன்று (30.01.2026) பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தொடர்ந்து, மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் தெரிவித்ததாவது:-
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆட்சிப்பொறுப்பேற்ற பின்பு, பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களின் நலனை கருத்திற்கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். தமிழ்நாடு அரசின் மூலம் செயல்படுத்தப்படும் அனைத்து திட்டங்களும் அனைவருக்கும் சென்றடைய வேண்டும் என்பதனை நோக்கமாகக் கொண்டு ”எல்லோருக்கும் எல்லாம்” என்ற உன்னத நோக்கில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு, பல்வேறு துறைகள் இருந்தாலும்”பள்ளிக்கல்வித் துறை” மற்றும் ”மருத்துவத்துறை” இரண்டு துறைகளும் இரண்டு கண்கள் ஆகும். மருத்துவத்துறையினை மேம்படுத்துவதற்கு முடிவுற்ற திட்டப் பணிகளை தொடங்கியும், புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும் வருகிறார். அதனடிப்படையில், ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனையில் ரூ.20.00 கோடி மதிப்பீட்டில் தரைத்தளத்துடன் கூடிய 4 தளங்கள் மற்றும் 50 படுக்கை வசதிகளுடன் கூடிய புதிய தீவீர சிகிச்சை பிரிவு கூடுதல் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனை கூடுதல் கட்டிடமானது தரைத்தளத்துடன் 4 தளங்கள் (660 சதுர மீட்டர், 7102 சதுர அடி பரப்பளவில்) மற்றும் சாய்வுதளம் (364 சதுர மீட்டர், 3920 சதுர அடி பரப்பளவு) என மொத்தம் 3664.00 சதுர மீட்டர், 39420.00 சதுர அடியில் கட்டப்பட்டுள்ளது.
தரை தளமானது விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு, அதிதீவிர விபத்து சிகிச்சை பிரிவு, வெளிநோயாளிகள் பிரிவு, வெளி நோயாளிகள் அவசர சிகிச்சை பிரிவு, வென்டிலேட்டர் சேமிப்பு அறை, நுண்கதிர் அறை, இ.சி.ஜி எக்கோ அறை, இரத்த பரிசோதனைக் கூடம், மருத்துவர் அறை, செவிலியர் அறை, ஆண்கள் மற்றும் பெண்களுக்கான கழிப்பறை, சாய்வு தளம் மற்றும் படுக்கை மின்தூக்கி உள்ளிட்ட வசதிகள் கொண்ட தளமாக அமைக்கப்பட்டுள்ளது. முதல் தளமானது தீவிர விபத்து சிகிச்சை பிரிவு, அதிதீவிர விபத்து சிகிச்சை பிரிவு, தாய்சேய் நல பிரிவு, மருத்துவர் அறை, செவிலியர் அறை, மின் அறை மற்றும் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான கழிப்பறை உள்ளிட்ட வசதிகள் கொண்ட தளமாக அமைக்கப்பட்டுள்ளது.
இரண்டாம் தளமானது ஒரு அறுவை அரங்கம் (பொது மருத்துவம்), அறுவை சிகிச்சைக்கு பின் கவனிப்பு பகுதி (ஆண்கள்), மருத்துவர் அறை, செவிலியர் அறை, மின் அறை மற்றும் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான கழிப்பறை உள்ளிட்ட வசதிகள் கொண்ட தளமாக அமைக்கப்பட்டுள்ளது. மூன்றாம் தளமானது ஒரு அறுவை அரங்கம் (எலும்பியல்), அறுவை சிகிச்சைக்கு பின் கவனிப்பு பகுதி (பெண்கள்), இதய சிகிச்சை பிரிவு, மருத்துவர் அறை, செவிலியர் அறை, மின் அறை மற்றும் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான கழிப்பறை உள்ளிட்ட வசதிகள் கொண்ட தளமாக அமைக்கப்பட்டுள்ளது. நான்காம் தளமானது நிர்வாகப் பிரிவு, மருத்துவமனை கூட்ட அரங்கம், இரத்த சேமிப்புக் கூடம், இரண்டு ஆய்வுக் கூடம், மருந்தகம், கணிணி அறை, மின் அறை உள்ளிட்ட வசதிகள் கொண்ட தளமாக அமைக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து, இந்த மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள பிரேத பரிசோதனைக் கூடத்தில், ஆறு உடல்கள் வைக்கக்கூடிய குளிரூட்டப்பட்ட வசதி கொண்ட பிரேத பரிசோதனைக் கூடம், குளிர்சாதன பெட்டி அறை, மருத்துவர் அறை, காவலர் அறை, உதவியாளர் உபகரணங்கள் வைக்கும் அறை உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேலும், மருத்துவமனையில் தீயணைப்பு வசதிகள், ஆக்ஸிஜன் குழாய் வசதிகள், குடிநீர் வசதிகள், போர்வெல் வசதி, 1,00,000 இலட்சம் கொள்ளளவு கொண்ட 2 நிலத்தொட்டிகள், கழிவுநீர் சுத்தகரிப்பு நிலையம் (STP-100KLD AND ETP-15KLD) உள்ளிட்ட இதர வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், பொதுமக்கள், விவசாயிகள், மாணவ, மாணவிகள் என அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். மேலும், அரசின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் அனைத்தும் மக்களுக்கு முழுமையாக கொண்டு சேர்க்கப்படுகிறதா என்பதை உறுதி செய்வதற்கும் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். எனவே, அரசின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களை மக்கள் அனைவரும் முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் தெரிவித்தார்.
இந்நிகழ்வின் போது, திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் திரு.வி.திருமலை, ஒட்டன்சத்திரம் வட்டாட்சியர் திரு.சஞ்சைகாந்தி, துணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள்) திருமதி.பாரதி அவர்கள் ஆகியோர் உட்பட பலர் உள்ளனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.