Close

The Hon’ble Food and Civil Supply Minister Program

Publish Date : 01/04/2025
.

செ.வெ.எண்:-81/2025

நாள்:-30.03.2025

திண்டுக்கல் மாவட்டம்

மாண்புமிகு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் ஒட்டன்சத்திரம் அருள்மிகு பழனியாண்டவர் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற 4-வது கல்லூரி ஆண்டு விழாவில் கலந்து கொண்டு பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவியர்களுக்கு பரிசுகளை வழங்கினார்

மாண்புமிகு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் தலைமையில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருள்மிகு பழனியாண்டவர் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 4-வது கல்லூரி ஆண்டு விழா இன்று(30.03.2025) நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், மாண்புமிகு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் பேசியதாவது:-

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்கள். குறிப்பாக கல்விக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறார்கள்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பொறுப்பேற்ற பின்பு உயர்கல்வித்துறையின் சார்பாக 10 கல்லூரியும், இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் 10 கல்லூரியும் என மொத்தம் 20 கல்லூரிகள் அறிவிக்கப்பட்டது. இதில் இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் குளத்தூர், ஒட்டன்சத்திரம், விளாத்திக்குளம், திருச்செங்கோடு ஆகிய தொகுதிகளில் 4 கல்லூரிகள் நடைபெற்றுக்கொண்டியிருகிறது. மேலும், 6 கல்லூரிகளுக்கு அனுமதி வரவுள்ளது.

உயர்கல்வித்துறையின் சார்பில் 10 கல்லூரிகள் அறிவிக்கப்பட்டது. அதில் ஒட்டன்சத்திரம் தொகுதி களஞ்சியத்தில் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி துவங்கப்பட்டு, சொந்த கட்டடத்தில் அனைத்து அடிப்படை வசதிகளுடன் செயல்பட்டு வருகிறது. மேலும், விருப்பாட்சியில் அரசு தொழிற்பயிற்சி நிலையம் என பல்வேறு கல்வி நிறுவனங்கள் தொடங்கப்பட்டுள்ளன.

பழனி அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோயில் சார்பில் இயங்கும் அனைத்து கல்லூரிகளிலும் கடந்த 2022-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் காலை சிற்றுண்டி திட்டம், 2024-டிசம்பர் மாதம் முதல் மதிய உணவு திட்டத்தையும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் செயல்படுத்தி வருகிறார். கல்லூரியில் படிக்கும் மாணவியர்கள் கடின உழைப்பு, விடா முயற்சி, தன்னம்பிக்கை ஆகியவைகளை கடைபிடித்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும். உங்கள் எண்ணங்கள் வானத்தை தொடுகின்ற அளவிற்கு இருக்க வேண்டும். குறிக்கோள், விடாமுயற்சி, தன்னம்பிக்கையுடன் படிக்க வேண்டும். மேலும், இக்கல்லூரியில் படித்த மாணவியர்கள் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கினார்கள் என்ற பெருமையை நீங்கள் ஏற்படுத்தி தர வேண்டும்.

கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தில் 1.18 கோடி மகளிர் பயனடைந்து வருகின்றனர். இத்திட்டத்தில் தகுதியுள்ள பயனாளிகள் அனைவருக்கும் கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதேபோல், அரசு நகரப் பேருந்துகளில் மகளில் இலவச பயணம் மேற்கொள்ள விடியல் பயணத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன்மூலம் பெண்களின் பயணச்செலவு குறைக்கப்பட்டு, வேலைக்குச் செல்லும் ஒவ்வொரு பெண்ணுக்கும் மாதம் சுமார் ரூ.900 வரை சேமிப்பு ஏற்படுகிறது.

பெண்களின் பாதுகாப்பிற்காகவும், பெண்கள் உயர்கல்வி கற்பதை ஊக்குவிப்பதற்காக தமிழக அரசு சார்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் படித்து உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் ‘புதுமைப்பெண்’ திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன்மூலம் தமிழ்நாட்டில் பெண்கள் உயர்கல்வி படிப்பது 34 சதவீதம் உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் இத்திட்டத்தின் வாயிலாக சுமார் 5 இலட்சம் மாணவிகள் மாதந்தோறும் ரூ.1000 உதவித்தொகை பெற்று பயனடைந்து வருகின்றனர். இத்திட்டத்தில் மாணவர்களும் பயன்பெறும் வகையில் அரசு பள்ளி மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி(தமிழ்வழி கல்வி) படித்த மாணவர்கள் உயர்கல்வி படித்தால் அவர்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் ‘தமிழ்ப்புதல்வன்’ திட்டம் நடப்பு ஆண்டு முதல் செயல்படுத்தப்படுகிறது. இதற்காக ரூ.360 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

படித்த இளைஞர்கள் போட்டித்தேர்வுக்கு தயாராக வேண்டும் என்பதற்காக மதுரை, கோயம்புத்துார், சென்னை போன்ற நகரங்களுக்கு சென்று பயிற்சி பெற வேண்டிய நிலையை மாற்றி காளாஞ்சிப்பட்டியில் கலைஞர் நுாற்றாண்டு போட்டித்தேர்வு பயிற்சி மையம் ரூ.15.00 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு சிறந்த பயிற்சியாளர்களைக் கொண்டு மாணவ, மாணவிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் கடந்த தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வில்(தொகுதி 4) சுமார் 7 மாணவ, மாணவிகள் நல்ல மதிப்பெண் பெற்றுள்ளனர். தட்டச்சர் பணிக்கு ஒருவர் தமிழ்நாட்டிலேயே முதலிடம் பெற்றுள்ளார். தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வு தொகுதி 1 மற்றும் தொகுதி 2 ஆகிய தேர்வுகளில் பல மாணவ, மாணவிகள் முதல்நிலை தேர்வில் தகுதி பெற்றுள்ளனர்.

விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தவும், பயிற்சி அளிக்கவும் தமிழ்நாடு முழுவதும் விளையாட்டு மைதானங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தொப்பம்பட்டியில் ரூ.10.00 கோடி மதிப்பீட்டில் விளையாட்டு மைதானம் அமைக்கப்பட்டு வருகிறது. மேலும், ஒட்டன்சத்திரம் மற்றும் ஆத்துார் ஆகிய பகுதிகளில் விளையாட்டு மைதானம் அமைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. எனவே, இக்கல்லூரியில் படிக்கின்ற மாணவியர்கள் நல்ல முறையில் படித்து, இந்த சமுதாயத்திற்கு பெருமை சேர்க்கின்ற வகையில் உங்கள் வாழ்க்கையில் உயர வேண்டும் என மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அவர்கள் பேசினார்.

முன்னதாக கல்லூரியில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவியர்களுக்கு மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அவர்கள் பரிசுகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், ஒட்டன்சத்திரம் அருள்மிகு பழனியாண்டவர் மகளில் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் முனைவர் சு.வாசுகி, பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் அறங்காவலர் குழு தலைவர் திரு.கே.எம்.சுப்பிரமணியம், இணை ஆணையர்/செயல் அலுவலர் திரு.செ.மாரிமுத்து, துணை ஆணையர்/செயலர் திரு.ரெ.சா.வெங்கடேஷ், அறங்காவலர்கள் திரு.க.தனசேகர், திரு.சு.பாலசுப்பிரமணி, திரு.ஜி.ஆர். பால்சுப்பிரமணியம், திருமதி சி.அன்னபூரணி ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.