Close

The Hon’ble Food and Civil Supply Minister – Thoppampatty Union – Schemes

Publish Date : 18/11/2024
.

செ.வெ.எண்:-36/2024

நாள்:-16.11.2024

திண்டுக்கல் மாவட்டம்

மாண்புமிகு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், தேவத்துார், போடுவார்பட்டி, மஞ்சநாயக்கன்பட்டி மற்றும் கொத்தயம் ஆகிய ஊராட்சிகளில் ரூ.1.21 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற திட்டப்பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.

மாண்புமிகு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், திண்டுக்கல் மாவட்டம், தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியம், தேவத்துார், போடுவார்பட்டி, மஞ்சநாயக்கன்பட்டி மற்றும் கொத்தயம் ஆகிய ஊராட்சிகளில் ரூ.1.21 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற திட்டப்பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக இன்று(16.11.2024) திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சிகளில், மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் தெரிவித்ததாவது:-

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து, எல்லோருக்கும் எல்லாம் என்ற வகையில் தொடர்ந்து செயல்படுத்தி பொற்கால ஆட்சி நடத்தி வருகிறார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், பெண்கள் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தில் 1.18 கோடி மகளிர் பயனடைந்து வருகின்றனர். இத்திட்டத்தில் தகுதியுள்ள பயனாளிகள் விடுபட்டிருந்தால் அவர்களுக்கும் இத்திட்டத்தின் பயன்கள் கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் இன்னும் 10 ஆண்டுகளில் குடிசைகளே இல்லை என்ற நிலையை உருவாக்கும் வகையில் ஏழை, எளிய மக்களுக்கு வீடுகள் வழங்கும் வகையில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் 8.00 இலட்சம் வீடுகள் கட்டி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் நடப்பு ஆண்டில் ஒரு லட்சம் வீடுகள் வழங்கப்படவுள்ளது.

அதேபோல் தமிழ்நாட்டில் ஏற்கனவே தொகுப்பு வீடுகள் திட்டத்தில் கட்டப்பட்ட 2.5 இலட்சம் பழைய வீடுகளை பழுது பார்த்து வழங்குவதற்காக ரூ.2,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வீடுகள் கட்டுவதற்கு கட்டுமான பொருட்களை குறைந்த விலையில் வழங்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஓட்டு வீடுகளை பழுதுபார்க்க ரூ.50,000, கான்கிரீட் வீடுகளை பழுதுபார்க்க ரூ.1.50 இலட்சம் வழக்கப்படுகிறது. ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதியில் மட்டம் 2,200 வீடுகள் பழுதுபார்க்கப்படவுள்ளது.

தமிழ்நாட்டில் குடும்ப அட்டை கோரி பெறப்படும் விண்ணப்பங்களில் தகுதியான நபர்களுக்கு 15 நாட்களில் குடும்ப அட்டை வழங்கப்படுகிறது. அந்த வகையில் தமிழ்நாட்டில் இதுவரை 17.00 இலட்சம் புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் கடந்த 42 மாதங்களில் 2,500 நியாயவிலைக் கடைகள் பிரிக்கப்பட்டு புதிய கடைகள் உருவாக்கப்பட்டுள்ளன. அதில் திண்டுக்கல் மாவட்டத்தில் 230 முழுநேரம் மற்றும் பகுதிநேர நியாயவிலைக்கடைகள் பிரிக்கப்பட்டு புதியதாக முழுநேரம் மற்றும் பகுதிநேர நியாயவிலைக்கடைகள் உருவாக்கப்பட்டுள்ளன. ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதியில் மட்டும் 82 நியாயவிலைக்கடைகள் பிரிக்கப்பட்டு புதியதாக முழுநேரம் மற்றும் பகுதிநேர நியாயவிலைக் கடைகள் உருவாக்கப்பட்டுள்ளன.

விவசாயம் மற்றும் விவசாயிகளை மேம்படுத்துவதற்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. 2 இலட்சம் இலவச விவசாய மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

அரசு நகரப் பேருந்துகளில் மகளில் இலவச பயணம் மேற்கொள்ள விடியல் பயணத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன்மூலம் பெண்களின் பயணச்செலவு குறைக்கப்பட்டு, வேலைக்குச் செல்லும் ஒவ்வொரு பெண்ணுக்கும் மாதம் சுமார் ரூ.900 வரை சேமிப்பு ஏற்படுகிறது.

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தில் 20.70 இலட்சம் குழந்தைகள் பயனடைந்து வருகின்றனர். இந்த திட்டம் இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் இல்லை. தமிழ்நாட்டில்தான் செயல்படுத்தப்படுகிறது.

பெண்களின் பாதுகாப்பிற்காகவும், பெண்கள் உயர்கல்வி கற்பதை ஊக்குவிப்பதற்காக தமிழக அரசு சார்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் படித்து உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் ‘புதுமைப்பெண்’ திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன்மூலம் தமிழ்நாட்டில் பெண்கள் உயர்கல்வி படிப்பது 34 சதவீதம் உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் இத்திட்டத்தின் வாயிலாக சுமார் 5 இலட்சம் மாணவிகள் மாதந்தோறும் ரூ.1000 உதவித்தொகை பெற்று பயனடைந்து வருகின்றனர். இத்திட்டத்தில் மாணவர்களும் பயன்பெறும் வகையில் அரசு பள்ளி மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி(தமிழ்வழி கல்வி) படித்த மாணவர்கள் உயர்கல்வி படித்தால் அவர்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் ‘தமிழ்ப்புதல்வன்’ திட்டம் நடப்பு ஆண்டு முதல் செயல்படுத்தப்படுகிறது. இதற்காக ரூ.360 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அதேபோல் முதியோர் உதவித்தொகை ரூ.1000 என்பது ரூ.1,200ஆக உயர்த்தி வழங்கப்படுகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை ரூ.1000 என்பது ரூ.1,500ஆக உயர்த்தி வழங்கப்படுகிறது, மேலும், அதிகளவு பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை ரூ.1000 லிருந்து ரூ.2000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
ஒட்டன்சத்திரம் – கள்ளிமந்தையத்தில் உயர்கல்வித்துறை சார்பில் ஒரு கல்லுாரி, ஒட்டன்சத்திரம் அம்பிளிக்கையில் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் சார்பில் ஒரு பெண்கள் கல்லுாரி, விருப்பாட்சியில் அரசு தொழிற்பயிற்சி நிலையம் என பல்வேறு கல்வி நிறுவனங்கள் தொடங்கப்பட்டுள்ளன. கள்ளிமந்தையம் கல்லுாரிக்கு புதிய கட்டடம் கட்டப்பட்டுவிட்டது. ஒட்டன்சத்திரத்தில் பெண்கள் கல்லுாரி கட்ட ரூ.25.00 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விருப்பாட்சி தொழிற்பயிற்சி நிலையத்திற்கு ரூ.7.00 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டடம் கட்டப்பட்டுள்ளது.

படித்த இளைஞர்கள் அரசு பணிகளுக்கான போட்டித்தேர்வுக்கு தயாராக வேண்டும் என்பதற்காக மதுரை, கோயம்புத்துார், சென்னை போன்ற நகரங்களுக்கு சென்று பயிற்சி பெற வேண்டிய நிலையை மாற்றி காளாஞ்சிப்பட்டியில் கலைஞர் நுாற்றாண்டு போட்டித்தேர்வு பயிற்சி மையம் ரூ.15.00 கோடி மதிப்பீட்டில் குளிர்சாதன வசதியுடன் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு சிறந்த பயிற்சியாளர்களைக் கொண்டு மாணவ, மாணவிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் பயிற்சி பெற்று தேர்வு எழுதியவர்களில் கடந்த தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வில்(தொகுதி 4) சுமார் 7 மாணவ, மாணவிகள் நல்ல மதிப்பெண் பெற்றுள்ளனர். தட்டச்சர் பணிக்கு ஒருவர் தமிழ்நாட்டிலேயே முதலிடம் பெற்றுள்ளார். தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வு தொகுதி 1 மற்றும் தொகுதி 2 ஆகிய தேர்வுகளில் தலா 2 பேர் முதல்நிலை தேர்வில் தகுதி பெற்றுள்ளனர். மேலும், மத்திய அரசு பணியிடங்களுக்கான போட்டித் தேர்வுக்கும் விரைவில் பயிற்சி அளிக்கப்படவுள்ளது.

விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தவும், பயிற்சி அளிக்கவும் தமிழ்நாடு முழுவதும் விளையாட்டு மைதானங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தொப்பம்பட்டியில் ரூ.10.00 கோடி மதிப்பீட்டில் விளையாட்டு மைதானம் அமைக்கப்பட்டு வருகிறது. மேலும், ஒட்டன்சத்திரம் மற்றும் ஆத்துார் ஆகிய பகுதிகளில் தலா ஒரு விளையாட்டு மைதானம் அமைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 77 கிராம ஊராட்சிகள், ஒட்டன்சத்திரம் நகராட்சி மற்றும் கீரனுார் பேரூராட்சி உள்ளிட்ட பகுதிகளுக்கு காவிரி குடிநீர் திட்டம் ரூ.1000 கோடி மதிப்பீட்டில் பணிகள் நடைபெற்று வருகிறது. வரும் மார்ச் மாதத்திற்குள் இந்தப்பணிகள் முடிவுற்று பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும். இந்தத் திட்டம் நிறைவேற்றப்பட்டவுடன் அடுத்த 30 ஆண்டுகளுக்கு இந்த பகுதிகளில் குடிநீர் பிரச்சனை இருக்காது. அந்த வகையில் எதிர்கால மக்கள்தொகை பெருக்கத்தை கருதி இந்த திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

முதலமைச்சர் சாலை மேம்பாட்டுத் திட்டத்தில் ஆண்டுக்கு 10,000 கி.மீட்டர் நீளம் சாலைகளை மேம்படுத்தும் வகையில் ரூ.4,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு மொத்தம் 20,000 கி.மீட்டர் நீளம் சாலைகள் ரூ.8,000 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஊராட்சி ஒன்றிய சாலைகள் நெடுஞ்சாலைத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டு சாலைகள் சீரமைக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதியில் சுமார் 150.00 கோடி மதிப்பீட்டில் பல்வேறு இடங்களில் சாலைப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

புதியதாக 2500 பேருந்துகள் வாங்கப்படவுள்ளது. அதில் மதுரை கோட்டத்திற்கு 250 பேருந்துகள் வரவுள்ளன. அதில் ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதிக்கு 30 புதிய பேருந்துகள் தேவை என வலியுறுத்தியுள்ளேன். வரும் ஜனவரி மாதத்தில் புதிய பேருந்துகள் இயக்கப்படும்.

இன்றையதினம், தேவத்துார் ஊராட்சியில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் ரூ.14.00 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய அங்கன்வாடி மையக் கட்டடம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தில் ரூ.14.31 இலட்சம் மதிப்பீட்டில் பெருமாள்நாயக்கன்வலசில் கட்டப்பட்ட அங்கன்வாடி மையக் கட்டடம், போடுவார்பட்டி ஊராட்சியில் அனைத்துக் கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தில் ரூ.12.70 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட நியாயவிலைக்கடை கட்டடம், மஞ்சநாயக்கன்பட்டி ஊராட்சியில் நமக்குநாமே திட்டத்தில் ரூ.30.00 இலட்சம் மதிப்பீட்டில் காளிபட்டியில் கட்டப்பட்ட சமுதாயக்கூடம் கட்டடம், கொத்தயம் ஊராட்சியில் நமக்குநாமே திட்டத்தில் ரூ.50.00 இலட்சம் மதிப்பீட்டில் தீர்த்தக்கவுண்டன்வலசு ஆதிதிராவிடர் காலனியில் கட்டப்பட்ட சமுதாயக்கூடம் கட்டடம் என மொத்தம் ரூ.1.21 கோடி மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டுள்ளன.

“மரத்தை வளர்த்தால் மரம் நம்மை வளர்க்கும்“ என்று முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் கூறியுள்ளார்கள். காலைநிலை மாற்றத்திற்கேற்ப பருவமழை பொழிவு குறைவாக உள்ளது. எனவே, அதிக மழைபொழிவு மற்றும் சுகாதாரமான காற்றை சுவாசிக்க நாம் மரங்களை வளர்க்க வேண்டும். அதற்கு பொதுமக்களின் பங்களிப்பும் தேவை.

பொதுமக்கள், விவசாயிகள், மாணவ, மாணவிகள் என அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் அவர்களின் எண்ணங்கள், எதிர்பார்ப்பு மற்றும் நம்பிக்கையை பூர்த்தி செய்யும் வகையில் இந்த அரசு செயல்பட்டு வருகிறது, என மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் தெரிவித்தார்.

விழாவில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திருமதி பெ.திலகவதி, தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் திருமதி சத்தியபுவனா இராஜேந்திரன், துணைத்தலைவர் திரு.பி.சி.தங்கம், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக மண்டல மேலாளர் திரு.பாலமுருகன், நபார்டு(ம) கிராம சாலைகள் உதவி கோட்டப் பொறியாளர் திரு.கே.பொன்னுவேல், ஒட்டன்சத்திரம் வட்டாட்சியர் திரு.பழனிச்சாமி, வட்டார வளர்ச்சி அலுவலர் திரு.தாஹீரா, வட்ட வழங்கல் அலுவலர் திரு.ஜெகதீஸ்வரன், ஊராட்சி மன்ற தலைவர் திருமதி சுதா, குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் திருமதி சா.காலின் செல்வராணி, அரசு அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.