The Hon’ble Rural Development Minister – Meeting
செ.வெ.எண்:-95/2025
நாள்:-24.11.2025
திண்டுக்கல் மாவட்டம்
மாண்புமிகு ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் வட்டம், அய்யம்பாளையம் கிராமத்தில் அமைந்துள்ள மருதாநதி அணை வலது புற கால்வாய் ரூ. 8.01 கோடி மதிப்பீட்டில் நவீனபடுத்தும் பணிக்கான பூமிபூஜையினை தொடங்கி வைத்தார்.
மாண்புமிகு ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் வட்டம், அய்யம்பாளையம் கிராமத்தில் அமைந்துள்ள மருதாநதி அணை வலது புற கால்வாய் ரூ. 8.01 கோடி மதிப்பீட்டில் நவீனபடுத்தும் பணிக்கான பூமிபூஜையினை இன்று (24.11.2025) தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், மாண்புமிகு ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள் தெரிவித்ததாவது:-
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார்கள். மேலும், ”எல்லோருக்கும் எல்லாம்” என்ற வகையில் அரசின் திட்டங்கள் அனைத்துத் தரப்பு மக்களையும் சென்றடையும் வகையில் செயல்படுத்தி வருகிறார். குறிப்பாக, தமிழ்நாட்டு விவசாயப் பெருமக்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் நோக்கில் பல்வேறு திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார்கள்.
திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் வட்டம், அய்யம்பாளையம் கிராமத்தில் மருதாநதி அணையின் வலது புற கால்வாய் நவீனப்படுத்தும் பணிக்கு ரூ.8.01 கோடிக்கு நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டது. இக்கால்வாய் 1980-ஆம் ஆண்டு கட்டமைக்கப்பட்டது. இந்த அணையிலிருந்து வலதுபுற கால்வாய் சுமார் 9.86 கிலோமீட்டர் தூரம் பிரிந்து செல்கின்றது. கடந்த காலங்களில் பெய்த கன மழை காரணமாக மருதாநதி அணையின் வலது புற கால்வாயின் பெரும்பகுதி சேதமடைந்தும் மற்றும் குறுக்கு கட்டுமானம் சேதமடைந்தும் தண்ணீர் கொண்டு செல்ல இயலாத நிலை ஏற்பட்டது. இதனால் இக்கால்வாயினை நவீனப்படுத்த விவசாயப் பெருமக்கள் கோரிக்கை வைத்தனர்.
தற்போது, மருதாநதி அணை வலது புற கால்வாய் தரை மற்றும் கான்கிரீட் லைனிங் சேதமடைந்த ஏழு மேல்வளைக்கால்கள் மறுசீரமைப்பு பணி (Aqueduct) மற்றும் ஆறு கீழ்வளைக்காலகள் மறுசீரமைப்பு பணி (Well Syphon) இத்திட்டத்தில் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் பாசன நிலங்களுக்கு தண்ணீர் முழுமையாக கிடைப்பது உறுதி செய்யப்படும். இக்கால்வாயை நவீனபடுத்துவதன் மூலம் சுமார் 1616.03 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இத்திட்டத்தின் மூலம் அய்யம்பாளையம், தேவரப்பன்பட்டி, பட்டிவீரன்பட்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த விவசாயப் பெருமக்கள் பயனடைவார்கள் என மாண்புமிகு ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திருமதி. பெ.திலகவதி, நீர்வளத்துறை செயற்பொறியாளர் (மஞ்சளாறு வடிநிலக்கோட்டம், பெரியகுளம்) திரு.சரவணன், நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் (மருதாநதி வடிநிலக்கோட்டம், நிலக்கோட்டை) திரு.ஆ.தமிழ்செல்வன், நீர்வளத்துறை உதவிப் பொறியாளர் (மருதாநதி பிரிவு, அய்யம்பாளையம்) திரு.பெ.கோகுலக்கண்ணன், ஆத்தூர் வட்டாட்சியர் திரு.முத்து முருகன், வட்டார வளர்ச்சி அலுவலர் திரு.முருகன் அவர்கள் ஆகியோர் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.