Close

The Honorable Minister of Food and Civil Supplies – distributed free laptops to students.

Publish Date : 05/03/2026

செ.வெ.எண்:-19/2026

நாள்: 05.03.2026

திண்டுக்கல் மாவட்டம்

மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் ஒட்டன்சத்திரம் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சி பெறும் 66 மாணவ, மாணவியர்களுக்கு மடிக்கணிணிகளை வழங்கினார்.

மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில், திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சி பெறும் 66 மாணவ, மாணவியர்களுக்கு இன்று (05.03.2026) மடிக்கணிணிகளை வழங்கினார்.

இவ்விழாவில், மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் தெரிவித்ததாவது:-

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆட்சிப்பொறுப்பேற்ற பின்பு, பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களின் நலனை கருத்திற்கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். தமிழ்நாடு அரசின் மூலம் செயல்படுத்தப்படும் அனைத்து திட்டங்களும் அனைவருக்கும் சென்றடைய வேண்டும் என்பதனை நோக்கமாகக் கொண்டு ”எல்லோருக்கும் எல்லாம்” என்ற உன்னத நோக்கில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆட்சிப்பொறுப்பேற்ற பின்பு பள்ளிக்லவித் துறைக்கு அதிகளவில் நிதியொதுக்கீடு செய்து வருகிறார்கள். பல்வேறு துறைகள் இருந்தாலும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு ”பள்ளிக்கல்வித் துறை” மற்றும் ”மருத்துவத்துறை” இரண்டு துறைகளும் இரண்டு கண்கள் ஆகும். மேலும், இந்தியாவிலேயே முதன் முறையாக அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கின்ற குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை செயல்படுத்தினார்கள். இத்திட்டத்தினை அடிப்படையாகக் கொண்டு பல்வேறு நாடுகளில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கடந்த 05.01.2026-அன்று சென்னையில் நடைபெற்ற அரசு விழாவில் கல்லூரி மாணவர்களின் திறன் வளர்ச்சி மற்றும் டிஜிட்டல் முன்னேற்றத்திற்காக முதல் கட்டமாக 10 இலட்சம் மடிக்கணினிகள் வழங்கும் “உலகம் உங்கள் கையில்” திட்டத்தை தொடங்கி வைத்தார்கள். அதனைத் தொடர்ந்து, திண்டுக்கல் எம்.வி.எம் அரசு மகளிர் கலைக் கல்லூரியில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில இறுதி ஆண்டு பயிலும் 2,321 மாணாக்கர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து, திண்டுக்கல் மாவட்டத்தில் மடிக்கணிணிகள் வழங்கும் விழா தொடர்ந்து சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. அதனடிப்படையில், இன்றைய தினம் ஒட்டன்சத்திரம் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் மடிக்கணிணிகள் வழங்கும் விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது.

மேலும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆட்சிப்பொறுப்பேற்ற பின்பு, நகரப் பேருந்துகளில் பெண்கள் கட்டணமில்லா பயணம் மேற்கொள்ளும் விடியல் பயணத் திட்டத்தை தொடங்கி வைத்தார்கள். அதனைத் தொடர்ந்து, அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு காலை உணவுத் திட்டம், அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் (தமிழ் வழிக்கல்வி) படித்து உயர்கல்வி பயிலும் மாணவ, மாணவிகளுக்கு ‘புதுமைப்பெண்’ திட்டம் மற்றும் ”தமிழ்ப்புதல்வன்” திட்டம், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம், வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்ப அட்டைதாரர்களின் இல்லத்திற்கே சென்று அரிசி, சர்க்கரை உள்ளிட்ட ரேசன் பொருட்களை விநியோகம் செய்யும் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம், ஒரு குடும்பத்தில் பெற்றோரை இழந்த எத்தனை குழந்தைகள் இருந்தாலும் அவர்களுக்கு 18 வயது வரையிலான பள்ளிப் படிப்பு முடியும் வரை இடைநிற்றல் இன்றி கல்வியை தொடர மாதம் ரூ.2,000 உதவித்தொகை வழங்கிடும் “அன்புக்கரங்கள்” திட்டம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள்.

தொடர்ந்து, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆட்சிப்பொறுப்பேற்ற பின்பு, மாணவர்களின் நலனை கருத்திற்கொண்டு ”இல்லம் தேடி கல்வி” ”எண்ணும் எழுத்தும் திட்டம்” உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். மாணவர்களாகிய நீங்கள் பெற்றோர்கள், ஆசிரியர் பெருமக்கள் அனைவரும் நமது முன்னேற்றத்திற்காக உழைத்து வருகின்றனர் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். படிப்பு ஒன்றுதான் நமது வாழ்க்கையை மேம்படுத்தும் என்ற எண்ணத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், பொதுமக்கள், விவசாயிகள், மாணவ, மாணவிகள் என அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். மேலும், அரசின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் அனைத்தும் மக்களுக்கு முழுமையாக கொண்டு சேர்க்கப்படுகிறதா என்பதை உறுதி செய்வதற்கும் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். எனவே, அரசின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களை பொதுமக்கள் அனைவரும் முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், ஒட்டன்சத்திரம் அரசினர் தொழிற்பயிற்சி நிலைய பயிற்சி அலுவலர் (பொறுப்பு) திருமதி.சி.ரமாதேவி அவர்கள் உட்பட ஆசிரியர் பெருமக்கள், மாணவ, மாணவியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.