The Honorable Minister of Food and Civil Supplies – Inaugurated the foundation stone laying and completed projects.
செ.வெ.எண்:-35/2026
நாள்:-10.03.2026
திண்டுக்கல் மாவட்டம்
மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு ஊராட்சிப் பகுதிகளில் ரூ.2.10 கோடி மதிப்பீட்டிலான திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி வைத்து ரூ.42.82 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு ஊராட்சிப் பகுதிகளில் ரூ.2.10 கோடி மதிப்பீட்டிலான திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி வைத்து மற்றும் ரூ.42.82 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை இன்று (10.03.2026) பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சிகளில், மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் தெரிவித்ததாவது:-
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆட்சிப்பொறுப்பேற்ற பின்பு, பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களின் நலனை கருத்திற்கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். தமிழ்நாடு அரசின் மூலம் செயல்படுத்தப்படும் அனைத்து திட்டங்களும் அனைவருக்கும் சென்றடைய வேண்டும் என்பதனை நோக்கமாகக் கொண்டு ”எல்லோருக்கும் எல்லாம்” என்ற உன்னத நோக்கில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆட்சிப்பொறுப்பேற்ற பின்பு, நகரப் பேருந்துகளில் பெண்கள் கட்டணமில்லா பயணம் மேற்கொள்ளும் விடியல் பயணத் திட்டத்தை தொடங்கிவைத்தார்கள். அதனைத் தொடர்ந்து, அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு காலை உணவுத் திட்டம், அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் (தமிழ் வழிக்கல்வி) படித்து உயர்கல்வி பயிலும் மாணவ, மாணவிகளுக்கு ‘புதுமைப்பெண்’ திட்டம் மற்றும் ”தமிழ்ப்புதல்வன்” திட்டம், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம், வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்ப அட்டைதாரர்களின் இல்லத்திற்கே சென்று அரிசி, சர்க்கரை உள்ளிட்ட ரேசன் பொருட்களை விநியோகம் செய்யும் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம், ஒரு குடும்பத்தில் பெற்றோரை இழந்த எத்தனை குழந்தைகள் இருந்தாலும் அவர்களுக்கு 18 வயது வரையிலான பள்ளிப் படிப்பு முடியும் வரை இடைநிற்றல் இன்றி கல்வியை தொடர மாதம் ரூ.2,000 உதவித்தொகை வழங்கிடும் “அன்புக்கரங்கள்” திட்டம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள்.
மேலும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆட்சிப்பொறுப்பேற்ற பின்பு, தமிழ்நாட்டில் இதுவரை 21.00 இலட்சம் புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. திண்டுக்கல் மாவட்டத்தில் இதுவரை 72078 குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும், 3256 புதிய பகுதி நேர மற்றும் முழு நேர நியாய விலைக்கடைகள் பிரிக்கப்பட்டுள்ளன. 2 இலட்சத்து 50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதியில் ஏற்கனவே 50 ஆயிரம் மகளிருக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. மேலும், தற்போது 10 ஆயிரம் மகளிருக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட்டுள்ளது. எனவே, ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதியில் மட்டும் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மகளிர் மகளிர் உரிமைத்தொகை பெற்று பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 13.02.2026-அன்று மகளிர் உரிமைத்தொகை பெறும் மகளிர் வங்கிக் கணக்கில் ரூபாய் 5,000 பற்று வைக்கப்பட்டது. இதனால் மகளிர் உரிமைத்தொகை பெறும் அனைத்து பெண்களும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளார்கள். மகளிர் உரிமைத் தொகையினை ரூபாய் 1,000-லிருந்து ரூபாய் 2,000-ஆக உயர்த்தி வழங்க வேண்டும் என்பதே மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் நோக்கமாகும்.
மேலும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் பயன்பெறும் வகையில் காவிரி ஆற்றிலிருந்து குடிநீர் கிடைப்பதற்கு ரூ.940 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதைத் தொடர்ந்து பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ், ஒரு நாளைக்கு 1 நபருக்கு 55 லிட்டர் தண்ணீர் என்ற விகிதத்தில் வழங்கப்படவுள்ளது. இதில் முதற்கட்டமாக நிறைவு பெற்றுள்ள பணிகளை கடந்த 13.02.2026-ஆம் தேதியன்று பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கடந்த 04.02.2026-அன்று ”உங்களுடன் ஸ்டாலின்” திட்டத்தின் 10,000 முகாம்கள் நலத்திட்டப் பயன்கள் மற்றும் 1.80 இலட்சம் புதிய பயனாளிகளுக்கு சமூக பாதுகாப்புத் திட்டப் பயன்கள் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார்கள். இத்திட்டத்தின் கீழ், திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள 9,809 பயனாளிகளுக்கு ரூ.1.17 கோடி மதிப்பீட்டில் மூத்த குடிமக்களுக்கான முதியோர் உதவித்தொகை மற்றும் ஏனைய சமூக பாதுகாப்பு திட்ட உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், பழனி வட்டம், பழனி – தாராபுரம் சாலையில் நான்கு வழி சாலை மேம்பாலம் ரூ.69.10 கோடி மதிப்பீட்டில் அமைப்பதற்கு நிதி ஒதுக்கீடும், நில எடுப்பு பணிகளுக்கு ரூ.26.39 கோடி மதிப்பீட்டில் நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டதைத் தொடர்ந்து கடந்த 05.03.2026-அன்று பழனி – தாராபுரம் சாலையில் திருப்பூர், ஈரோடு, சேலம், நீலகிரி, தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்கள் பயன்பெறும் வகையில், நான்கு வழி சாலை மேம்பாலம் அமைப்பதற்கான பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தமிழ்நாட்டை குடிசைகள் இல்லாத மாநிலமாக உருவாக்க கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தை செயல்படுத்தி வருகிறார். தமிழ்நாட்டில் 8 இலட்சம் வீடுகள் கட்ட திட்டமிடப்பட்டு, 2 இலட்சம் வீடுகள் கட்டுவதற்கு ஆணை வழங்கப்பட்டதைத் தொடர்ந்து 1 இலட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ், ஒட்டன்சத்திரம் நகராட்சியில் 480 வீடுகள் கட்ட அனுமதி வழங்கப்பட்டு கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் மீண்டும் 1 இலட்சம் வீடுகள் கட்டுவதற்கும் ஆணை பிறப்பித்துள்ளார்கள்.
எனவே, எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்ற உன்னத நோக்கத்துடன், பொதுமக்களின் எண்ணங்கள், எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். எனவே, அரசின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களை பொதுமக்கள் அனைவரும் முழுமையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் தெரிவித்தார்.
தொடர்ந்து, இன்றைய தினம், ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியம், புளியம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட வண்ணாம்பட்டி கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் (2024-2025)-ன்கீழ் ரூ.09.97 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள உணவு தானியக் கிட்டங்கியையும், புளியம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட வண்ணாம்பட்டி கிராமத்தில் ரூ.200.00 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு திருமண மண்டபத்தையும் என மொத்தம் ரூ.2.10 கோடி மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப் பணிகளை மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
மேலும், ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியம், புளியம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட பழனி- தாராபுரம் சாலை முதல் புளியம்பட்டி சாலை வரை (0.550 கி.மீ) முதலமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டம் (2025-2026)-ன்கீழ் ரூ.16.68 இலட்சம் மதிப்பீட்டில் சாலை மேம்பாட்டுப் பணி, புளியம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட வண்ணாம்பட்டி கிராமத்தில் உள்ள ரேசன் கடை முன்பு 15-வது நிதிக்குழு மானிய திட்டம் (2025-2026)-ன்கீழ், ரூ.0.80 இலட்சம் மதிப்பீட்டில் மேற்கூரை அமைக்கும் பணி, புளியம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட வண்ணாம்பட்டி கிராமத்தில் உள்ள ரேசன் கடை முன்பு 15-வது நிதிக்குழு மானிய திட்டம் (2025-2026)-ன்கீழ், ரூ.1.85 இலட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் தளம் அமைக்கும் பணி, புளியம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட வண்ணாம்பட்டி கிராமத்தில் உள்ள சமுதாயக் கூடம் முன்புறம் 15-வது நிதிக்குழு மானிய திட்டம் (2025-2026)-ன்கீழ், ரூ.09.00 இலட்சம் மதிப்பீட்டில் Steel Shed அமைக்கும் பணி, புளியம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட வண்ணாம்பட்டி கிராமத்தில் உள்ள சமுதாயக் கூடத்திற்கு 15-வது நிதிக்குழு மானிய திட்டம் (2025-2026)-ன்கீழ், ரூ.03.82 இலட்சம் மதிப்பீட்டில் கழிப்பறை அமைக்கும் பணி, புளியம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட நால்ரோடு சீனிவாசா நகர் பகுதியில் 15-வது நிதிக்குழு மானிய திட்டம் (2025-2026)-ன்கீழ், ரூ.04.65 இலட்சம் மதிப்பீட்டில் ஆழ்துளை கிணறு அமைத்து மோட்டார் கேபிள் பொருத்தும் பணி, புளியம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட தெற்கு காலனி தெற்கு தெருவில் 15-வது நிதிக்குழு மானிய திட்டம் (2025-2026)-ன்கீழ், ரூ.02.40 இலட்சம் மதிப்பீட்டில் சிறுபாலம் மற்றும் கழிவுநீர் வாய்க்கால் அமைக்கும் பணி, புளியம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட வண்ணாம்பட்டி சாலையில் உள்ள சமுதாயக் கூடத்தின் முன்புறம், ஒப்படைக்கப்பட்ட வருவாய் மானிய நிதி (கிராம ஊராட்சிகள்) திட்டம் (2025-2026)-ன்கீழ், ரூ.03.62 இலட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் கான்கிரீட் சாலை அமைக்கும் பணி உள்ளிட்ட ரூ.42.82 இலட்சம் மதிப்பீட்டிலான புதிய திட்டப் பணிகளுக்கு மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் அடிக்கல் நாட்டி பணியினை தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சிகளில், பழனி வருவாய் கோட்டாட்சியர் திரு.இரா.கண்ணன், பழனி வட்டாட்சியர் திரு.சக்திவேலன், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளர் திரு.சிற்றரசு, திண்டுக்கல் மாவட்ட துணைப் பதிவாளர் (பொது விநியோகத் திட்டம்) திரு.சு.பா.கார்த்திகேயன், தொப்பம்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர் திருமதி.தாஹிரா அவர்கள் ஆகியோர் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.