Close

The Honorable Minister of Rural Development distributed laptops to 515 students at the Cooperative Arts and Science College

Publish Date : 12/03/2026

செ.வெ.எண்:-37/2026

நாள்: 11.03.2026

திண்டுக்கல் மாவட்டம்

மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், ஆத்தூர் கலைஞர் நுற்றாண்டு கூட்டுறவு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 515 மாணவ, மாணவியர்களுக்கு மடிக்கணிணிகளை வழங்கினார்.

மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் கலைஞர் நூற்றாண்டு கூட்டுறவு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 515 மாணவ, மாணவியர்களுக்கு மடிக்கணிணிகளை இன்று(11.03.2026) வழங்கினார். தொடர்ந்து, மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள் தெரிவித்ததாவது:-

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆட்சிப்பொறுப்பேற்ற பின்பு, பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களின் நலனை கருத்திற்கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். தமிழ்நாடு அரசின் மூலம் செயல்படுத்தப்படும் அனைத்து திட்டங்களும் மக்களுக்கு முழுமையாக கொண்டு சேர்க்கப்பட வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டு ”எல்லோருக்கும் எல்லாம்” என்ற நோக்கில் செயலாற்றி வருகிறார்கள்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், மாணவ, மாணவிகளின் கல்வி மேம்பாட்டிற்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்கள். சுமார் 20 இலட்சம் மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினிகள் வழங்கப்படும் என அறிவித்து முதல் கட்டமாக 10 இலட்சம் மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சியினை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மற்றும் மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்கள் முன்னிலையில் 05.01.2026-அன்று சென்னையில் தொடங்கி வைத்துள்ளார்கள். அதனைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் தொடங்கி வைக்கப்பட்டது. மேலும், விரிந்த இந்த உலகத்தில் உலகத்தை உங்கள் கைகளில் அடக்கும் வகையில் மடிக்கணிணிகள் வழங்கும் ”உலகம் உங்கள் கையில்” திட்டத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தொடங்கி வைத்துள்ளார்கள். அதனைத் தொடர்ந்து உலகத்தை உள்ளடக்கிய மடிக்கணிணிகள் உங்கள் கையில் கொண்டு சேர்க்கப்பட்டு வருகிறது. எனவே, மாணவ, மாணவியர்கள் நல்ல முறையில் பயன்படுத்தி தங்களுடைய அறிவாற்றலை வளர்த்துக்கொண்டு வாழ்க்கையில் எல்லா வகையிலும் முன்னேற்றம் அடைய வேண்டும். ஆத்தூர் கலைஞர் நூற்றாண்டு கூட்டுறவு கலை மற்றும் அறிவியல் கல்லூயில் 560 மாணவ, மாணவியர்கள் இரண்டாம் ஆண்டு பயின்று வருகிறார்கள். இவர்களில் 301 மாணவர்களுக்கும், 214 மாணவிகளுக்கும் என மொத்தம் 515 மாணவ. மாணவியர்களுக்கு மடிக்கணினி வழங்கப்பட்டுள்ளது. இக்கல்லூரியில் இளங்கலை கூட்டுறவு, வரலாறு, பொருளியல், வணக நிர்வாகம், வணிகவியல், வணிகவியல் மற்றும் கணினிபயன்பாடு, தமிழ், ஆங்கிலம். கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பம், கணினி பயன்பாடு, இயற்பியல்,வேதியியல், விலங்கியல் உட்பட பல்வேறு பாடப்பிரிவுகளில் மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றார்கள். அரசு பள்ளியில் படித்து கல்லூரி மேல் படிப்பிற்கு சென்றால் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் ”புதுமைப்பெண்” மற்றும் மாணவர்களுக்கு ”தமிழ்ப்புதல்வன்” ஆகிய திட்டங்களின் கீழ் சுமார் 19 இலட்சம் மாணவ, மாணவிகள் பயனடைந்து வருகின்றனர். இது மக்களுக்கான அரசு, ஏழைகளுக்கான அரசு. பொதுமக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றிட இந்த அரசு என்றென்றும் தயாராக உள்ளது. எனவே, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் கருத்தை வலுப்படுத்தும் விதமாக அவருக்கு என்றென்றும் ஆதரவு அளிக்க வேண்டும், என மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் அவர்கள் பேசினார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திருமதி சௌ.கங்காதாரணி, மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் திரு.ஸ்ரீராகவ் பாலாஜி அவர்கள், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநர் திருமதி.சுபாஷினி அவர்கள், திண்டுக்கல் மாவட்ட கூட்டுறவு ஒன்றிய மேலாண்மை இயக்குநர் திரு.செல்வகுமார், சரக துணைப்பதிவாளர் திரு.மு.கார்த்திக் கௌதம் ஆகியோர் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.