Close

The Honorable Rural Development Minister—Free Patta and Inauguration Function.

Publish Date : 12/03/2026

செ.வெ.எண்: 39/2026

நாள்: 12.03.2026

திண்டுக்கல் மாவட்டம்

மாண்புமிகு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள் ஆத்தூர் சட்டமன்ற தொகுதி, அக்கரைப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட 250 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்களை வழங்கினார். தொடர்ந்து, ஆத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பல்வேறு ஊராட்சிப் பகுதிகளில் ரூ.52.10 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப் பணிகளை பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

மாண்புமிகு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் சட்டமன்ற தொகுதி, அக்கரைப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட 250 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்களை இன்று (12.03.2026) வழங்கினார்.

தொடர்ந்து, மாண்புமிகு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் சட்டமன்ற தொகுதி, அக்கரைப்பட்டி ஊராட்சியில் ரூ.08.00 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள பேருந்து நிறுத்த நிழற்குடையினையும், எஸ்.பாறைப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட ராமநாதபுரத்தில் ரூ.09.85 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள நியாய விலைக்கடையினையும், வீரக்கல் ஊராட்சிக்குட்பட்ட கும்மம்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில் ரூ.34.25 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள இரண்டு கூடுதல் வகுப்பறைக் கட்டடங்களையும் என மொத்தம் ரூ.52.10 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப் பணிகளை பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

தொடர்ந்து, மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள் தெரிவித்ததாவது :-

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆட்சிப்பொறுப்பேற்ற பின்பு, பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களின் நலனை கருத்திற்கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். தமிழ்நாடு அரசின் மூலம் செயல்படுத்தப்படும் அனைத்து திட்டங்களும் அனைவருக்கும் சென்றடைய வேண்டும் என்பதனை நோக்கமாகக் கொண்டு ”எல்லோருக்கும் எல்லாம்” என்ற உன்னத நோக்கில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆட்சிப்பொறுப்பேற்ற பின்பு, பெண்களின் வாழ்வினை முன்னேற்றும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். மேலும், ஆண்டுதோறும் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு அதிகளவில் நிதியொதுக்கீடு செய்து கடனுதவிகளை வழங்கி வருகிறார். இக்கடனுதவிகளை பெற்ற மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் குழுக்களாகச் சேர்ந்து சிறுதொழில்கள் ஆரம்பித்து வாழ்வில் முன்னேற்றம் அடைந்து வருகின்றனர்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தமிழ்நாட்டை குடிசைகள் இல்லாத மாநிலமாக உருவாக்க கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தை செயல்படுத்தி வருகிறார். தமிழ்நாட்டில் 8 இலட்சம் வீடுகள் கட்ட திட்டமிடப்பட்டு, 2 இலட்சம் வீடுகள் கட்டுவதற்கு ஆணை வழங்கப்பட்டதைத் தொடர்ந்து 1 இலட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால், தென்காசியில் 29.10.2025-அன்று பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து மேலும் தமிழ்நாட்டில் 1 இலட்சம் கலைஞரின் கனவு இல்லம் வீடுகள் கட்டுவதற்கு நிதியொதுக்கீடு செய்து ஆணை பிறப்பித்துள்ளார்கள். .

மேலும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆட்சிப்பொறுப்பேற்ற பின்பு, தமிழ்நாட்டில் இதுவரை 21.00 இலட்சம் புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. திண்டுக்கல் மாவட்டத்தில் இதுவரை 72078 குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும், 3256 புதிய பகுதி நேர மற்றும் முழு நேர நியாய விலைக்கடைகள் பிரிக்கப்பட்டுள்ளன. 2 இலட்சத்து 50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தகுதியான நபர்கள் அனைவருக்கும் இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க வழிவகை செய்ய வேண்டும் என்ற நோக்கில் இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார்கள். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வழியில், திண்டுக்கல் மாவட்டத்தில் பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான அரசு ஆட்சிப்பொறுப்பேற்ற நாள் (07.05.2021) முதல் தற்போது வரை திண்டுக்கல் மாவட்டத்தை சேந்த 1,32,501 பயனாளிகளுக்கு ரூ.107.57 கோடி மதிப்பிலான இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில், ஆத்துார் சட்டமன்ற தொகுதியைச் சேர்ந்த 8,887 பயனாளிகளுக்கு ரூ.6.70 கோடி மதிப்பீட்டில் இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன.

அதனடிப்படையில், இன்றைய தினம் அக்கரைப்பட்டி ஊராட்சியில் இலவச வீட்டுனைப் பட்டாக்கள் வழங்கும் நிகழ்ச்சியில் முதற்கட்டமாக 250 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 150 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்குவதற்கு அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எனவே, விரைவில் அக்கரைப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட 150 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்படும்.

எனவே, இலவச வீட்டுமனைப் பட்டாக்களை பெற்ற பயனாளிகள் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள இடத்தினை நேரில் பார்த்து உறுதி செய்து கொள்ளலாம். இலவச வீடுமனைப் பட்டாக்களை பெறும் பயனாளிகள் குறிப்பிட்ட காலத்திற்குள் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட இடத்தில் வீடு கட்ட வேண்டும் என்ற விதிமுறை உள்ளது. ஆகவே, அரசின் விதிமுறைகளுக்குட்பட்டு குறிப்பிட்ட காலத்திற்குள் வீடு கட்டவில்லை என்றால் அந்த இடத்தை அரசுக்கு ஒப்படைப்பு செய்ய வேண்டும். இதனை கருத்திற்கொண்டு பயனாளிகள் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு கட்டுவதற்கு உரிய ஆவணங்களை சமர்ப்பித்து விண்ணப்பிக்கலாம்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், மாணவ, மாணவிகளின் கல்வி மேம்பாட்டிற்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்கள். சுமார் 20 இலட்சம் மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினிகள் வழங்கப்படும் என அறிவித்து முதல் கட்டமாக 10 இலட்சம் மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கும் “உலகம் உங்கள் கையில்” திட்டத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 05.01.2026-அன்று தொடங்கி வைத்தார்கள். அதனைத் தொடர்ந்து, திண்டுக்கல் மாவட்டத்தில் மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடத்தப்பட்டு மடிக்கணினிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்ற உன்னத நோக்கத்துடன், பொதுமக்களின் எண்ணங்கள், எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். எனவே, அரசின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களை பொதுமக்கள் அனைவரும் முழுமையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என மாண்புமிகு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள் தெரிவித்தார்.

இந்நிகழ்வில், திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் திரு.கோ.பழனிவேல், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திருமதி.கங்காதாரணி, திண்டுக்கல் மாவட்ட துணைப் பதிவாளர் (பொது விநியோகத் திட்டம்) திரு.சு.பா.கார்த்திகேயன், ஆத்தூர் வட்டாட்சியர் திரு.முத்துமுருகன், ஆத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திரு.முருகன்,
திருமதி.பத்மாவதி அவர்கள் ஆகியோர் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.