Close

The Honorable Rural Development Minister – inaugurated the foundation stone laying and completed projects.

Publish Date : 26/02/2026

செ.வெ.எண்: 67/2026 நாள்: 25.02.2026

திண்டுக்கல் மாவட்டம்

மாண்புமிகு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள் ஆத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பொன்னிமாந்துரை ஊராட்சியில் ரூ.33 இலட்சம் மதிப்பீட்டிலான புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி வைத்து, ரூ.29.22 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

அதனைத்தொடர்ந்து, கலைஞர் நூற்றாண்டு ஆத்தூர் கூட்டுறவு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் புதிய கட்டிடத்தின் வகுப்புகளை துவக்கி வைத்து கல்லூரி மாணவ, மாணவியர்களுடன் கலந்துரையாடினார்.

மாண்புமிகு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பொன்னிமாந்துரை ஊராட்சியில் ரூ.33 இலட்சம் மதிப்பீட்டிலான புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி வைத்து, ரூ.29.22 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு இன்று(25.02.2026) திறந்து வைத்தார்.

அதனைத்தொடர்ந்து, கலைஞர் நூற்றாண்டு ஆத்தூர் கூட்டுறவு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் புதிய கட்டிடத்தின் வகுப்புகளை துவக்கி வைத்து கல்லூரி மாணவ, மாணவியர்களுடன் கலந்துரையாடினார்.

இந்நிகழ்ச்சியில், மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள் தெரிவித்ததாவது :-

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆட்சிப்பொறுப்பேற்ற பின்பு, பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களின் நலனை கருத்திற்கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். தமிழ்நாடு அரசின் மூலம் செயல்படுத்தப்படும் அனைத்து திட்டங்களும் அனைவருக்கும் சென்றடைய வேண்டும் என்பதனை நோக்கமாகக் கொண்டு ”எல்லோருக்கும் எல்லாம்” என்ற உன்னத நோக்கில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. .

தமிழகத்தை குடிசை இல்லா மாநிலமாக மாற்ற வேண்டும் என்ற உன்னத நோக்கத்தில் வீடு இல்லாத ஏழை, எளிய மக்கள் பாதுகாப்புடன் வசிக்க வேண்டும் என்பதற்காக அவர்களுக்கு, தமிழக அரசு சார்பில் இலவச வீடுகள் கட்டி வழங்குவதற்காக “கலைஞரின் கனவு இல்லம்“ திட்டத்தின் கீழ், முதற்கட்டமாக 2024-25-ஆம் ஆண்டில் ஒரு லட்சம் வீடுகள் கட்டி வழங்கப்படும் என்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவித்துள்ளார்கள். தமிழ்நாட்டில் 8 இலட்சம் வீடுகள் கட்ட திட்டமிடப்பட்டு, 2 இலட்சம் வீடுகள் கட்டுவதற்கு ஆணை வழங்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டத்தில் 10,000 பயனாளிகளுக்கு கலைஞர் கனவு இல்லம் கட்டப்பட்டு வருகிறது.

அதில் ஆத்தூர் வட்டத்தில் 4000 கலைஞர் கனவு இல்லம் கட்டப்பட்டு வருகிறது. தொடர்ந்து, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தமிழ்நாட்டில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் மேலும் 1 இலட்சம் வீடுகள் கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்து ஆணை பிறப்பித்துள்ளார்கள். ஆத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பொன்னிமாந்துரை மற்றும் அய்யங்கோட்டை ஊராட்சி பகுதியில் பாலம் கட்டிதரப்பட்டுள்ளது. முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் மகளிர் சுய உதவிக்குழுக்களை 1989-ஆம் ஆண்டு தருமபுரியில் ஆரம்பித்தார்கள். மகளிர் தனது சொந்த காலால் நிற்க வேண்டும் என்பதற்காக கொண்டு வந்தார்கள். இந்தியாவில் உள்ள ஏழை எளிய மக்கள் பயன்பெற வேண்டும் என்பதற்காக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் கொண்டு வரப்பட்டது.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்தபடி மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் மகளிர் உரிமைத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் வாயிலாக சுமார் 1.30 கோடி மகளிர் மாதம் ரூ.1000 பெற்று பயனடைந்து வருகின்றனர். இரண்டாம் கட்டமாக 17 இலட்சம் மகளிருக்கு வழங்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 4 இலட்சத்து 62 ஆயிரம் நபர்கள் மகளிர் உரிமைத் தொகை பெற்று பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில் மகளிர் உரிமைத்தொகை பெறும் மகளிர் வங்கிக் கணக்கில் ரூபாய் 5,000 பற்று வைக்கப்பட்டது. இதனால் மகளிர் உரிமைத்தொகை பெறும் அனைத்து பெண்களும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளார்கள். மகளிர் உரிமைத் தொகையினை ரூபாய் 1,000-லிருந்து ரூபாய் 2,000-ஆக உயர்த்தி வழங்க வேண்டும் என்பதே மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் நோக்கமாகும். தற்போது வரை மகளிர் உரிமைத்தொகை கிடைக்காதவர்களுக்கும் வழங்கப்படும்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கல்விக்கு சுமார் 50 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீட்டுள்ளார்கள். குறிப்பாக 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில்(தமிழ் வழிக்கல்வி) படித்து உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் ‘புதுமைப்பெண்’ திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன்மூலம் தமிழ்நாட்டில் 34 சதவீதம் பெண்கள் உயர்கல்வி படிப்பது உயர்ந்துள்ளது. இதேபோல் மாணவர்களுக்கும் மாதம் ரூ.1000 வழங்கும் ”தமிழ்ப்புதல்வன்” திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

கலைஞர் நூற்றாண்டு ஆத்தூர் கூட்டுறவு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் படிக்ககூடிய மாணவ, மாணவியர்கள் விடாமுயற்சி, கடின உழைப்பு இவற்றை கடைபிடித்து படித்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும். இக்கல்லூரியில் படிக்கும் மாணவ, மாணவியர்கள் அதிக மாணவர்கள் அரசு பணியில் சேர வேண்டும். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கல்விக்காக அதிகமான நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்கள்.

இக்கல்லூரியில் படித்து வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்கள் இந்த சமுதாயத்திற்கு நல்ல முறையில் சேவை செய்து பெருமை அடைய வேண்டும். அனைவரும் நல்ல முறையில் படித்து தங்கள் குடும்ப பொருளாதார நிலையை உயர்த்த வேண்டும் என மாண்புமிகு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள் தெரிவித்தார்.

தொடர்ந்து, இன்றைய தினம், ஆத்தூர் சட்டமன்ற தொகுதி ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றியம், பொன்னிமாந்துரை ஊராட்சியில் ரூ.16.55 இலட்சம் மதிப்பீட்டில் நல்லேந்திரபுரத்தில் புதிதாக கட்டப்பட்ட அங்கன்வாடி மையம், ரூ.12.67 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட நியாயவிலைக்கடை கட்டடம் ஆகிய முடிவுற்ற திட்டப்பணிகளை மாண்புமிகு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் அவர்கள் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.

மேலும், பொன்னிமாந்துரை ஊராட்சியில் ரூ.33 இலட்சம் மதிப்பீட்டில் புதிய தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி கட்டடம் கட்டும் புதிய திட்டப் பணிகளுக்கு மாண்புமிகு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் அவர்கள் அடிக்கல் நாட்டி பணியினை தொடங்கி வைத்தார்.

மேலும், கலைஞர் நூற்றாண்டு ஆத்தூர் கூட்டுறவு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கூட்டுறவுவியல் பிரிவில் கலையியல் இளையர் பட்டம் முதலிடம் தங்கப் பதக்கம் பெற்றமைக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் முதல் மதிப்பெண் பெற்ற 39 மாணவ, மாணவிகளுக்கும், 100 சதவிகிதம் வருகை பதிவேடு வைத்துள்ள மாணவ, மாணவிகளுக்கும், 5 ஆசிரியர்களுக்கும், பல்வேறு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற 5 மாணவ,மாணவிகளுக்கும் , பட்டய பயற்சி பெற்ற 5 மாணவ, மாணவிகள் என மொத்தம் 99 நபர்களுக்கு பட்டயம் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை மாண்புமிகு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் அவர்கள் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் திரு.ஸ்ரீராகவ் பாலாஜி, திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் திரு.வி.மூ.திருமலை, உதவி இயக்குநர்(ஊராட்சிகள்) திரு.சீனிவாசபெருமாள், திண்டுக்கல் மேற்கு வட்டாட்சியர் திரு.சுல்தான் சிக்கந்தர், ஆத்தூர் வட்டாட்சியர் திரு.முத்துமுருகன், திண்டுக்கல் சரக துணைப்பதிவாளர் திரு.மு.கார்த்திக் கௌதம், துணைபதிவாளர்(அபிராமி) திரு.வி.டி.கனகராஜ், இயக்குநர் (மாவட்ட கூட்டுறவு ஒன்றிய மோண்மை) திரு.ம.செல்வகுமார், இயக்குநர் (தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியம்) திரு.எஸ்.கிருஷ்ணகுமார், ஆத்தூர் கூட்டுறவு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் முனைவர் பெ.பாலகுருசாமி, நிர்வாக அலுவலர் திரு.இரா.கணேசன், வட்டார வளர்ச்சி அலுவலர் திரு.மலரவன் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.