The Honourable Minister for RD, Mr. I. Periyasamy, released water from the Maruthanadhi dam in Dindigul’s Athoor block for agricultural and drinking reasons.
செ.வெ.எண்: 34/2026
நாள்: 13.01.2026
திண்டுக்கல் மாவட்டம்
மாண்புமிகு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள் திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் வட்டத்திற்குட்பட்ட மருதாநதி அணையிலிருந்து விவசாயத்திற்கும், குடிநீர் தேவைக்கும் தண்ணீரை திறந்து வைத்தார்.
மாண்புமிகு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள் இன்று (13.01.2026) திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் வட்டத்திற்குட்பட்ட மருதாநதி அணையிலிருந்து விவசாயத்திற்கும், குடிநீர் தேவைக்கும் தண்ணீரை திறந்து வைத்தார்.அதனைத் தொடர்ந்து, திண்டுக்கல் மாவட்டம். ஆத்தூர் ஊராட்சி ஒன்றியம், தேவரப்பன்பட்டி ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலச்சித் திட்டம்-II-ன்கீழ் ரூ.31.40 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டிடத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
தொடர்ந்து, மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள் தெரிவித்ததாவது :-
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆட்சிப்பொறுப்பேற்ற பின்பு, பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களின் நலனை கருத்திற்கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். தமிழ்நாடு அரசின் மூலம் செயல்படுத்தப்படும் அனைத்து திட்டங்களும் அனைவருக்கும் சென்றடைய வேண்டும் என்பதனை நோக்கமாகக் கொண்டு ”எல்லோருக்கும் எல்லாம்” என்ற உன்னத நோக்கில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
மருதாநதி அணையின் மொத்த உயரமான 74 அடியில் 12.01.2026-ஆம் தேதி நிலவரப்படி 72 அடி வரை நீர் இருப்பு உள்ளது. எனவே, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க (நீர்வளத் (கே1)துறை அரசாணை (வாலாயம்) எண்.25இ நாள்.12.01.2026), இன்றைய தினம் திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் வட்டம், அய்யம்பாளையம் கிராமத்திற்குட்பட்ட மருதாநதி அணையிலிருந்து விவசாயத்திற்கும், குடிநீர்த் தேவைக்காகவும் 13.01.2026 முதல் 17.01.2026 வரை ஐந்து நாட்களுக்கு வினாடிக்கு 100 கன அடி வீதம் மொத்தம் 43.20 மி.க.அடிக்கு மிகாமல் தேவைக்கேற்ப தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.மேலும், மருதாநதி அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டதன் மூலம் ஆத்தூர் வட்டத்திற்குட்பட்ட அய்யம்பாளையம், சித்தரேவு மற்றும் தேவரப்பன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகளின் 5,943 ஏக்கர் நிலமும், நிலக்கோட்டை வட்டத்திற்குட்பட்ட சேவுகம்பட்டி மற்றும் கோம்பைபட்டி கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகளின் 640 ஏக்கர் நிலமும் செழிப்படையும். மேலும், இப்பகுதிகளில் குடிநீர் பிரச்சனைகளும் களையப்படும். முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் ஆட்சிக்காலத்தில் தமிழகத்தில் தொழில் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று விவசாயப்பணிகள் மேம்பாட்டுக்காக 1972-ஆம் ஆண்டு மருதாநதி அணை அமைக்கப்பட்டது. மேலும், மருதாநதி அணையின் இடது புற கால்வாய் ரூ. 17.85 கோடி மதிப்பீட்டிலும், வலது புற கால்வாய் ரூ. 8.01 கோடி மதிப்பீட்டிலும் நவீனபடுத்தும் பணிகள் கடந்த 24.11.2025-அன்று தொடங்கி வைக்கப்பட்டது. கால்வாய்களை நவீனபடுத்தும் பணிகளை விரைந்து முடித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அரசின் திட்டங்களை மக்களுக்கு சென்றடைய செய்வதிலும், வளர்ச்சித் திட்டப்பணிகளை அனைத்துப் பகுதிகளிலும் சீராக நிறைவேற்றுவதிலும் இந்த அரசு உறுதியாக உள்ளது. இது மக்களுக்கான அரசு, ஏழைகளுக்கான அரசு. பொதுமக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றிட இந்த அரசு என்றென்றும் தயாராக உள்ளது. எனவே, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் கருத்தை வலுப்படுத்தும் விதமாக அவருக்கு என்றென்றும் ஆதரவு அளிக்க வேண்டும் என மாண்புமிகு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் திரு.வி.மூ.திருமலை, மஞ்சளாறு உப கோட்டப் பொறியாளர் திரு.சரவணன், மருதாநதி அணைச் செயற்பொறியாளர் திரு.தமிழ்ச்செல்வன், உதவிப் பொறியாளர் திரு.கோகுலக்கண்ணன், ஆத்தூர் வட்டாட்சியர் திரு.முத்துமுருகன் அவர்கள் ஆகியோர் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.
