Close

The Palani Government Hospital’s freshly completed extra phases were inaugurated.

Publish Date : 05/03/2026

செ.வெ.எண்:-15/2026

நாள்:-05.03.2026

திண்டுக்கல் மாவட்டம்

மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் பழனி அரசு தலைமை மருத்துவமனையில் ரூ.70.00 கோடி மதிப்பீட்டில் 137 படுக்கை வசதிகளுடன் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கூடுதல் கட்டங்களை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் திண்டுக்கல் மாவட்டம், பழனி அரசு தலைமை மருத்துவமனையில் ரூ.70.00 கோடி மதிப்பீட்டில் 137 படுக்கை வசதிகளுடன் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கூடுதல் கட்டங்களை இன்று (05.03.2026) பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

தொடர்ந்து, மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் தெரிவித்ததாவது:-

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆட்சிப்பொறுப்பேற்ற பின்பு, பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களின் நலனை கருத்திற்கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். தமிழ்நாடு அரசின் மூலம் செயல்படுத்தப்படும் அனைத்து திட்டங்களும் அனைவருக்கும் சென்றடைய வேண்டும் என்பதனை நோக்கமாகக் கொண்டு ”எல்லோருக்கும் எல்லாம்” என்ற உன்னத நோக்கில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு, பல்வேறு துறைகள் இருந்தாலும்”பள்ளிக்கல்வித் துறை” மற்றும் ”மருத்துவத்துறை” இரண்டு துறைகளும் இரண்டு கண்கள் ஆகும். மருத்துவத்துறையினை மேம்படுத்துவதற்கு முடிவுற்ற திட்டப் பணிகளை தொடங்கியும், புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும் வருகிறார். அதனடிப்படையில், பழனி அரசு தலைமை மருத்துவமனையில் ரூ.70.00 கோடி மதிப்பீட்டில் 137 படுக்கை வசதிகளுடன் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கூடுதல் கட்டங்களை இன்றைய தினம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது.

பழனி அரசு மருத்துவமனை திண்டுக்கல் மாவட்டத்தில் மிகவும் பழமையான மருத்துவமனையாகும். திண்டுக்கல் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அடுத்தபடியாக பழனி, அரசு மருத்துவமனை, 1940-ஆம் ஆண்டிலிருந்து செயல்பட்டு வருகிறது. பழனி அரசு மருத்துவமணை 07 ஏக்கர் பரப்பளவுடன் தற்போது 207 படுக்கை வசதிகளும், 14 உள்ளிருப்பு சிகிச்சைப் பிரிவுகளும், 30 சிறப்பு மருத்துவர்களும், 05 செவிலியர் காண்காணிப்பாளர்கள், 48 செவிலியர்கள், 19 தொகுப்பூதிய செவிலியர்கள் மற்றும் 20 தொழில்நுட்பபணியாளர்களும், 21 மருத்துவம் சாரா பணியாளர்களும் பழனி அரசு மருத்துவமனையில் பணிபுரிகின்றனர். சிறப்பு திட்டங்கள் பிரிவில் 35 பணியாளர்கள் மற்றும் புற ஆதார அமைப்பின் மூலம் 37 பணியாளர்களும் பணிபுரிந்து வருகின்றனர்.

பழனியைச் சுற்றியுள்ள கிராமப்புற மக்கள் உயர் மருத்துவ சிகிச்சைக்காக கோவை, மதுரை போன்ற ஊர்களுக்கு சுமார் 120 கிலோ மீட்டர்களுக்கு மேலும், திண்டுக்கல்லிற்கு சுமார் 60 கிலோ மீட்டர்களுக்கு மேலும் செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது. பழனி அரசு மருத்துவமனை மாநில அரசு அளவில் NOAS, LAQSHYA தரச்சான்றிற்காக தேர்வுசெய்யப்பட்டுள்ளது. மேலும் ஒன்றிய அரசு அளவில் KAYAKALP தரச்சான்று பெற்றுள்ளது. மேலும், நோயாளிகளின் பயன்பாட்டிற்காக புதிதாக டிஜிட்டல் நுண்கதிர் பிரிவு பயன்பாட்டில் உள்ளது. மருத்துவ ஆய்வகமும், முடநீக்கியல் சிகிச்சை பிரிவும் திறம்பட செயல்பட்டு வருகிறது.

இம்மருத்துவமனைக்கு ரூ.9 கோடி மதிப்பீட்டிலான கூடுதல் கட்டிடம் 56 கூடுதல் படுக்கைகளுடன் (தரைத்தளம், அவசர சிகிச்சை பிரிவு, TAEI பிரிவு (முதல் தளம் –அறுவை சிகிச்சைக்குபின் கவனிப்பு பிரிவு, இரண்டாவது தளம் -அறுவை சிகிச்சை அரங்கு, மூன்றாவது தளம் –அலுவலகம், நான்காவது தளம்- இணை இயக்குநர் அலுவலகம்) அமைக்கப்பட்டு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் கடந்த 06.10.2025-அன்று காணொலி காட்சி மூலம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டதைத் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வருகிறது. பழனி அரசு தலைமை மருத்துவமனையில் சராசரியாக நாளொன்றிற்கு 2,052 வெளிநோயாளிகள், 175 உள்நோயாளிகள், மாதத்திற்கு 150 பிரசவங்கள், 1,31,654 ஆய்வக பரிசோதனை, 258 பெரிய அறுவை சிகிச்சை, 982 சிறிய அறுவை சிகிக்கைகள் நடைபெற்று வருகிறது.

பழனி அரசு தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்த அரசாணை (நிலை) எண்:18, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு (F1) துறை, நாள்:10.01.2023-ன்படி, ரூ.70.00 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, (G+6) மற்றும் (G+5)-3, ETP, STP PLANT, உயிரி மருத்துவக்கழிவு சேகரிப்பு அறை, பிணவறை, உயர் மின் அழுத்த அறை முதலிய கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளது.

(G+6) – தரைத்தளத்தில் – புறநோயாளிகள் பிரிவு, மருந்தகம், முடநீக்குவியல் துறையும், முதல் தளத்தில் – குழந்தைகள், காது மூக்கு தொண்டை புறநோயாளிகள் பிரிவு மற்றும் குழந்தைகள் உள் நோயாளிகள் பிரிவுகளும், இரண்டாவது தளத்தில் – ஆண்கள் மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை உள் நோயாளிகள் பிரிவுகளும், மூன்றாவது தளத்தில் -பெண்கள் மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை உள் நோயாளிகள் பிரிவுகளும், நான்காவது தளத்தில் – மனநலம், எலும்பு முறிவு பிரிவு, காது, மூக்கு, தொண்டை உள்நோயாளிகள் பிரிவுகளும், ஐந்தாவது தளத்தில் -சிறப்பு உள்நோயாளிகல் பிரிவு, ஆறாவது தளத்தில் – கருத்தரங்கம் உள்ளிட்ட பிரிவு கட்டடங்கள் தரைத்தளத்துடன் கூடிய 6 மாடிகள் கொண்ட கட்டடமாக அமைக்கப்பட்டுள்ளது.

(G+5)-1 கட்டடம் தரைத்தளம் – CSSD, முதல் தளம் – அறுவை சிகிச்சைக்கு பின் கவனிப்பு பிரிவு, இரண்டாவது தளம் – இரத்த சுத்திகரிப்பு பிரிவு, மூன்றாவது தளம் – இரத்த வங்கி, நான்காவது தளம் – முதலமைச்சர் காப்பீடு திட்ட உள்நோயாளிகள் ஆண்கள் பிரிவு, ஐந்தாவது தளம்- முதலமைச்சர் காப்பீடு திட்டம் உள் நோயாளிகள் பெண்கள் பிரிவு உள்ளிட்ட பிரிவு கட்டடங்கள் தரைத்தளத்துடன் கூடிய 5 மாடிகள் கொண்ட கட்டடமாக அமைக்கப்பட்டுள்ளது.

(G+5) -2 கட்டடம் தரைத்தளம் – சி.டி.ஸ்கேன், எம்.ஆர்.ஐ, அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன், முதல் தளம் -அறுவை அரங்கம் -2, இரண்டாவது தளம் – ICU, மூன்றாவது தளம்- IPHL ஆய்வகம், (PM ABHIM ஒரு கோடி நிதி), நான்கவது தளம் – முதலமைச்சர் காப்பீடு திட்ட உள் நோயாளிகள் பிரிவு, ஐந்தாவது தளம் – கிடங்கு பிரிவு கட்டடங்கள் தரைத்தளத்துடன் கூடிய 5 மாடிகள் கொண்ட கட்டடமாக அமைக்கப்பட்டுள்ளது. மேலும், (G+5)-3 கட்டடம் மகப்பேறு மற்றும் பச்சிளம் குழந்தைகள் பிரிவு (Cemonc & sncu) கட்டடமாக அமைக்கப்பட்டுள்ளது. எனவே, திண்டுக்கல் மாவட்டம், பழனி அரசு தலைமை மருத்துவமனை 207 படுக்கைகள் வசதிகளுடன் செயல்பட்டு வந்த நிலையில், தற்போது 137 படுக்கைகள் அதிகரித்து 400 படுக்கை வசதிகள் கொண்ட கட்டடமாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், பொதுமக்கள், விவசாயிகள், மாணவ, மாணவிகள் என அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். மேலும், அரசின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் அனைத்தும் மக்களுக்கு முழுமையாக கொண்டு சேர்க்கப்படுகிறதா என்பதை உறுதி செய்வதற்கும் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். எனவே, அரசின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களை மக்கள் அனைவரும் முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் தெரிவித்தார்.

இவ்விழாவில், திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் ரு.ஆர்.சச்சிதானந்தம் அவர்கள், பழனி சட்டமன்ற உறுப்பினர் திரு.இ.பெ.செந்தில்குமார் அவர்கள், பழனி அரசு தலைமை மருத்துவமனை இணை இயக்குநர் (நலப்பணிகள்) மரு. பாரதி அவர்கள், பழனி அரசு தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் மரு.பி.உதயகுமார் அவர்கள், பழனி அரசு தலைமை மருத்துவமனை துணை இயக்குநர் (நலப்பணிகள்) மரு.மோ.அனிதா அவர்கள், பழனி வருவாய் கோட்டாட்சியர் திரு.இரா.கண்ணன் அவர்கள், பழனி நகர்மன்றத் தலைவர் திருமதி.இரா.உமாமகேஸ்வரி, துணைத் தலைவர் திரு.கே.கந்தசாமி அவர்கள் ஆகியோர் உட்பட மருத்துவத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.